தமிழக சட்டப்பேரவை தேசத்திற்கு முன்னோடி: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேசத்திற்கு முன்னோடி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப் படத்தைத் தமிழக சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டுவிழாவினைச் சிறப்பிக்க குடியரசுத் தலைவர் வருகை தந்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. நாட்டின் பழமையான மற்றும் தொடக்கத்தில் அமைந்த சட்ட மன்றங்களில் ஒன்றாக இருப்பதால், பல முக்கியச் சட்டங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அச்சட்டங்களில் சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி, வறுமை ஒழிப்பு, மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களின் நலன் போன்ற முன்னோடித் திட்டங்களும் இதில் அடங்கும். இவற்றில் பல திட்டங்கள் நம் நாட்டின் கொள்கைகள் மற்றும் திட்டப்பணிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
கருணாநிதியின் பெருமையை நான் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். ‘கலைஞர்’ என்றும் ‘முத்தமிழ் அறிஞர்’ என்றும் அழைக்கப்படும் அவர் தன்னுடைய பேச்சுத்திறமையால் மக்களை ஈர்த்தார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததும், தனது அரசியல் வாழ்க்கையில் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அவர் தனது இளம் பருவமான 14 -வது வயதிலேயே அரசியலில் நுழைந்து, பதின்மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அவர் வெற்றிவாகை சூடினார். அவருடைய அரசியல் மதிநுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத் திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களால் அவர் போற்றப்படுகிறார். அவர் இறக்கும் வரை இந்த சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்தார்.

ஒரு பிரதிநிதித்துவ மக்களாட்சியில், சட்டமன்றம் மக்களின் கண்கள், காதுகள் மற்றும் குரலாக செயல்படுகிறது என்று சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் ஸ்டூவர்ட் மில் கூறினார். சட்டப்பேரவை பொது விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது. சட்டப்பேரவை, கூட்டு முடிவெடுக்கும் முறையின் கீழ் செயல்படுகிறது. அலுவல் சார்ந்த சட்டத்தை உருவாக்கும் திறனுடன் கூடுதலாக, பெரும்பாலான சட்டப்பேரவைகள் சிக்கலான பிரச்சினைகளை எளிதாக்குவதன் வாயிலாகவும் கொள்கை விருப்புரிமைகளை வரையறுப்பதன் வாயிலாகவும் கல்விப் பங்காற்றுகின்றன.
இந்தப் பின்னணியில், பரந்த அறிவாற்றல் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கருணாநிதி ஆற்றிய பணிகளை நாம் பாராட்ட வேண்டும். நிர்வாக பொருண்மைகளில் அவர் காட்டிய சுறுசுறுப்பும் அவரது அற்புதமான விவாதங்களும் இந்த சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும் கூட வசப்படுத்தியது.

மேலும், திருவள்ளுவரின், ”சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்னும் குறளை நினைவுகூர்கிறேன்.

கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தை ஒரு சம்பவத்தால் நன்கு உணர்த்த முடியும். 1972 ஆம் ஆண்டில், இராஜாஜி உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்களின் சேவைகளுக்காகவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும் விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜாஜியால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை அதனால் அப்போதைய முதல்வரான கருணாநிதியிடம், அவர் சார்பாக அப்போதைய ஆளுநரிடமிருந்து விருதைப் பெற்று தன்னிடம் அனுப்புமாறு வேண்டினார். அவ்வாறே விருதைப் பெற்று அவர், இராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து விருதினை வழங்கினார். இதை இராஜாஜி பெரிதும் பாராட்டினார். ஒரு மாநிலத்தின் முதல்வர் நேரில் சென்று விருதை வழங்கும் முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கருணாநிதி தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றார். அவர் 'மக்களின் முதல்வர்' என அன்புடன் அழைக்கப்பட்டார்.

பார்வை சரிசெய்யும் திட்டம், பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு திட்டம், கையால் இழுக்கப்பட்ட ரிக்க்ஷாக்களுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்க்ஷா அறிமுகம் செய்தல், குடிசை மாற்று வாரியம் உருவாக்கம், மகளிருக்கு சம சொத்துரிமைக்கான சட்டம், திருமண உதவித் தொகை திட்டம், நிலமற்ற உழவர்களுக்கு தரிசு நிலம் வழங்கும் திட்டம், உழவர்களுக்கு இலவச மின்சாரம், பல தொழிலாளர் நல வாரியங்கள் அமைத்தல், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள், சாதி பாகுபாட்டினை ஒழிப்பதற்காக சமத்துவபுரங்கள், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்பு, மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டம் போன்ற புதுமையான திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அவரது எண்ணற்ற அர்ப்பணிப்பு சேவையினை பறைசாற்றுகிறது.

கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில், நம் நாட்டின் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும், அனைத்து பிரதமர்களுடனும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடனும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் எப்பொழுதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது ஒரு காலத்தில் சிறப்புரிமையுடையதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. இது சில உரிமைகளையும் பொறுப்புகளையும் வழங்குகிறது. . தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமே மக்களின் இறையாண்மை நமது சட்டப்பேரவை அமைப்புகளில் வெளிப்படுகிறது. மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பற்றுறுதியையும் நேர்மையுடனும் பொறுப்புடனும் நியாயப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகளாக, மக்களாட்சியின் ஜோதியை பிரகாசமாக ஜொலிக்கவைக்கும் சவாலான பணி உங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட 16 - ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம். மேலும் மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கலாம். இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து பாடுபடுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நூற்றாண்டு விழா சிறப்பாக அமைவதற்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .சமூக மற்றும் பொருளாதார நீதிக்கு அளப்பரிய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உங்களது முன்னோர்களைப் போன்று நீங்கள் அனைவரும்

இந்த அவையின் மாண்பினை வளப்படுத்த அயராது செயல்படுவீர்கள் என்பதில் நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த சட்டப்பேரவை இனி வரும்காலத்திலும் நம் தேசத்திற்கு முன்னோடியாகத் திகழட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்