கரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் தொடக்கம்: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கரோனாவிழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று கரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் தொடங்கின.

ஆவடி மாநகராட்சி சார்பில் புதிய ராணுவ சாலையில் கரோனா விழிப்புணர்வு வாகனத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், நேரு பஜார்,புதிய ராணுவ சாலையில் உள்ளகாய்கறி, பழ அங்காடிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இதேபோல, பட்டாபிராம், தண்டுரை, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், பூந்தமல்லி, திருவள்ளூர், திருவேற்காடு, திருத்தணி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளிலும் கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ஊரகதொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கரோனாவிழிப்புணர்வு வாரம் தொடங்கப்பட்டது. பின்னர் அவர் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி, அங்கன்வாடி பணியாளர்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் அறிவொளி தீபம்கலைக் குழுவினரின் கரோனா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்லாவரம் நகராட்சி சார்பில் ஆணையர் எம்.காந்திராஜ் தலைமையில் பல்லாவரம் பேருந்து நிறுத்தத்திலும், பம்மல் நகராட்சி சார்பில் சுகாதாரஅலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE