மேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

மேகேதாட்டு அணை குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியே இல்லை என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில், நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால், அகில இந்திய மருத்துவப் படிப்புக்கு அந்த இடஒதுக்கீடு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதற்காக, 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

திமுகவினர் சமூக நீதி என வெளிவேஷம் போடுகிறார்கள். உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாஜகதான். தமிழ்நாடு பாடநூல் கழகம் தகுதி இல்லாதவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் உள்ளவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா?. இதுதொடர்பாக விசாரித்த தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் மீதும் புகார் எழுந்துள்ளதால், அவரையும் டிஜிபி விசாரிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் துரோகமிழைத்து, டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும்தான். எனவே, மேகேதாட்டு அணை குறித்து பேச திமுகவுக்கு தகுதியே இல்லை.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மேகேதாட்டு தொடர்பாக விண்ணப்பமே வரவில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக அரசு அனுமதி அளித்துவிட்டதாக தமிழகத்தில் தவறாக பேசி வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE