ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பதா?- கலைஞர் நூலக விவகாரத்தில் அதிமுக கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்ற முடிவு, சரித்திரத்தைச் சிதைப்பதற்கு சமம் என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தனக்குத்தானே சிலை வைத்துக் கொள்வது", "தனக்குத்தானே பொன்விழா எடுத்துக் கொள்வது", "அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளை அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களை எழுத வைப்பது", "இந்தியக் குடியரசுத் தலைவரால் தமிழ்நாடு சட்டபேரவையில் மு.கருணாநிதியின் திருவுருவப் படம் திறக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சொத்து மதிப்பின் அடிப்படையில் வாக்குரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணத் தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா என்று கொண்டாட இருப்பது", என்ற வரிசையில் தற்போது தென் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனைக் கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, "சிந்திக்கத் தொடங்கிய முதல் சிந்தனையாளன், சுயநலமுள்ளவனாக, தன்னைப் பற்றிய எண்ணத்தை மட்டுமே கொண்டவனாக இருந்துவிட்டிருந்தால், இன்றைய உலகம், நாகரிக உலகம் ஏற்பட்டிருக்க முடியாது" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிதான் எங்களின் நினைவிற்கு வருகிறது.

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பேணிப் பாதுகாப்பதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.

அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழகத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லம் தமிழ்நாடு அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் "மதுரையில் முன்னாள் முதல்வரின் பெயரிலான நூலகம் அமைக்கத் தேர்வான பொதுப்பணித் துறைக் கட்டிடத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் "சொந்தக் காரியம் என்று வரும்போது, மனிதன் குருடனாகி விடுகிறான்" என்ற வரிகள்தான் எங்கள் நினைவிற்கு வருகின்றன. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆனால், தென் தமிழக விவசாயிகளோ, இதற்கு நேர்மாறான கருத்தினைத் தெரிவிக்கிறார்கள். தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக், மதுரை மாநகரில் நத்தம் செல்லும் சாலையில் வாழ்ந்ததாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடைய உடைகளைச் சுவற்றில் தொங்கவிடுவதற்கு ஸ்டாண்டும், 'பெரியாறு இல்லம்' என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருந்ததாகவும், இது உண்மை என்பதால்தான், மதுரை மாநகரப் பொதுப்பணித் துறை வளாகத்தில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 15.06.2000 அன்று கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலை, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதாகவும், அந்தக் கல்வெட்டில் "இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். அதனை உடனே நிறைவேற்ற வேண்டும். இதனைத் தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை" என்று பொறிக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்தச் சொற்களுக்குச் சொந்தக்காரர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் என்றும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் வாழ்ந்த இல்லம் நூறாண்டு கடந்து அரசால் பராமரிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் அவர் இந்த நாட்டிற்குச் செய்த நன்மைகளை, தியாகங்களை, தொண்டுகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அந்த வகையில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு இல்லம் இன்றளவிலும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை அழித்துவிட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆற்றியப் பணி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது. முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான பணியினை மேற்கொள்ளும் பொறுப்பு கர்னல் ஜான் பென்னிகுயிக் இடத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளைத் தாண்டி பாதியளவு அணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்காததால், இங்கிலாந்து சென்று தன்னுடைய குடும்பச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுயிக் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இதன் பயனாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது பாசன வசதி பெற்று வருகின்றன.

இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம், லோயர் கேம்பில் கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு நினைவு மணி மண்டபத்தை அவரது பிறந்த நாளான 15.01.2013 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததையும், அதே நிகழ்ச்சியில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் தேனி பேருந்து நிலையத்திற்கு "கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம்" என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடனும் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக, குறிப்பாக விவசாயிகளுக்காகப் பாடுபட்டு முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்ற முடிவு, சரித்திரத்தைச் சிதைப்பதற்கு சமம் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அஇஅதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்