3-வது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழல்: தனிக்கவனம் செலுத்துக- ஓபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா குறித்து வெளிவரும்‌ அரசின்‌ அறிக்கையினைப் பார்க்கும்போது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் இதில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள்‌ கடைப்பிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, மூன்றாவது அலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக்‌ காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனா நோய்த்‌ தொற்றின்‌ தாக்கம்‌ குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, கட்டுப்பாடுகளுடன்‌ கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும்‌, வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌, சுற்றுலாத்‌ தலங்களிலும்‌ கூடிய கூட்டத்தைச் சுட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான்‌ 12-07-2021 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன்‌. தற்போது, இரண்டு, மூன்று நாட்களாக கரோனா குறித்து வெளிவரும்‌ அரசின்‌ அறிக்கையினைப் பார்க்கும்போது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.

28-07-2021 அன்று 1,756 ஆக இருந்த கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை, 29-07-2021 அன்று 1,859 ஆகவும்‌,
30-07-2021 அன்று 1,947 ஆகவும்‌, 31-07-2021 அன்று 1,986 ஆகவும்‌ உயர்ந்துள்ளது. 28-07-2021 அன்று கரோனா நோய்த்‌ தொற்று
உறுதி செய்யப்பட்டவர்களின்‌ எண்ணிக்கையை 31-07-2021 அன்று பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது,
பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை 230 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில்‌ கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில்‌ கரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தாலும்‌, சென்னை, கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருச்சி, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவள்ளூர்‌ போன்ற மாவட்டங்களில்‌தான்‌ கணிசமான அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதற்குக்‌ காரணம்‌ அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள்‌ சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான்‌.

இதுமட்டுமல்லாமல்‌, இன்னொன்றையும்‌ நான்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. கேரள மாநிலத்தில்‌ அண்மைக்‌ காலமாக கரோனாவால்‌
பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 22-07-2021 அன்று 12,818 என்றிருந்த பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை 31-07-2021 அன்று 20,624 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9 நாட்களில்‌ தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட எட்டாயிரம் உயர்ந்துள்ளது. எனவே, கேரளாவிலிருந்து கோயம்புத்தூர்‌, தேனி, கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள்‌ வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது மிகவும்‌ அவசியம்‌.

கரோனாவால்‌ பாதிக்கப்படுவர்களின்‌ எண்ணிக்கை தினமும்‌ அதிகரித்து வருவதை முதல்வர் நன்கு அறிவார்‌. அதனால்தான்‌, 30-7-2021 அன்று முதல்வரின் செய்தி வெளியீட்டின்‌ தலைப்பிலேயே "தமிழ்நாட்டில்‌ கூடுதல்‌ தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும்‌ ஒரு வாரம்‌ நீட்டிப்பு" என்றும்‌, "விதிமுறைகளைக் கண்டிப்புடன்‌ நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ காவல்துறைக்கு அறிவுரை" என்றும்‌ குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுதவிரச் சென்னையில்‌ ஒன்பது இடங்களில்‌ கடைகள்‌ செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சில வழிபாட்டுத்‌ தலங்களில்‌ தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும்‌, தடை விதிக்கப்படாத பகுதிகளில்‌ கட்டுப்பாடுகள்‌ கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும்‌, அனைவரும்‌ முகக்‌ கவசம்‌
அணிந்திருக்கிறார்களா என்பதையும்‌, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்குதான்‌ கடைகளுக்குள்‌ மக்கள்‌ கூட்டம்‌ இருக்கிறதா என்பதையும்‌, இதே கட்டுப்பாடுகள்‌ வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌, சுற்றுலாத்‌ தலங்களிலும்‌ கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும்‌ கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில்‌ சுணக்கம்‌ நிலவுவதாகத்‌ தெரிகிறது. கட்டுப்பாட்டு விதிகள்‌ காற்றில் பறக்கவிடப்படுகின்றன என்ற தகவலும்‌ வந்து கொண்டிருக்கிறது.

எனவே, முதல்வர் இதில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள்‌ கடைப்பிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, மூன்றாவது அலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக்‌ காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்