மூலிகைமணி க.வேங்கடேசன் காலமானார்: 50 ஆண்டுகளாக சித்த மருத்துவத்துக்கு அருந்தொண்டு ஆற்றியவர்

By செய்திப்பிரிவு

மூலிகைமணி இதழின் ஆசிரியரும், மூத்த சித்த மருத்துவருமான க.வேங்கடேசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த 50 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உன்னதப் பணியாற்றிய மூலிகைமணி இதழின் ஆசிரியர் க.வேங்கடேசன் தமிழகத்தின் தலைசிறந்த சித்த மருத்துவர்களில் ஒருவர். நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த சித்த மருத்துவத்தின் முன்னேற்றத்திற்காகப் பல அரும்பணிகளை ஆற்றியுள்ளார்.

தமிழனின் தனி அடையாளமாகவும், தமிழர்கள் உலகிற்கு அளித்த மருத்துவக் கொடையாகவும் விளங்கினாலும், ஒடுக்கப்பட்டிருந்த சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பையும், உரிமைகளையும் துணிவுடன் தனது வலிமையான எழுத்துகளின் மூலம் பறைசாற்றினார்.

மத்திய, மாநில அரசுகளுடன் பேசியும், போராடியும் அதன் உரிமைகளை வென்றெடுத்தார். அரை நூற்றாண்டாக அவர் ஆற்றிய சித்த மருத்துவப் பணிகள் வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தின் நீட்சியாகவே சித்த மருத்துவத்தைக் கருதிவந்த மத்திய அரசிடம் எடுத்துரைத்து சித்த மருத்துவத்தைத் தமிழரின் தனிச் சிறப்பு மருத்துவமாக நிறுவியவர். இதை அன்றைக்கே அதிகாரபூர்வமாக நாடாளுமன்றத்தில் செய்து முடித்தவர், பேராசிரியர் க.அன்பழகன்.

வட ஆற்காடு மாவட்டத்தில் காப்புக்கார வைத்தியப் பாரம்பரியத்தில், ஐந்தாம் தலைமுறை சித்த மருத்துவராகப் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் “தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்” எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வுக் கையேடு தமிழ் மருத்துவ வரலாற்றுக்கு மிக முக்கியப் பங்களிப்பாகும். அவருடைய ஆய்வேடு உலகெங்கும் பல ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு சித்த மருத்துவ வாரியத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய மருத்துவர் க.வேங்கடேசன், சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியையும், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் நிறுவப் பாடுப்பட்டார். பாரம்பரியமிக்க இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குநராகவும், பல முக்கியப் பணிகளைச் செய்துகொடுத்தவர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் பல்கலைக்கழக சித்த மருத்துவக் குழு உறுப்பினராகத் தொண்டாற்றினார். இப்பல்கலைக்கழகத்தில் உள்ள சித்த மருத்துவத்துறை (Department of Siddha) இவருடைய முன்னெடுப்பில் உருவானது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் சித்த மருத்துவக் குழுவில் பங்கேற்று சித்த மருத்துவத்திற்கு வளம் சேர்த்தார்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, அவரது அகர முதலி திட்ட இயக்கத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சித்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த ஆங்கில சித்த மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுத்தார். அதற்கு முன்னோடியாக “எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவம்” என்ற மாநாட்டினை இம்ப்காப்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி மாபெரும் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். தமிழகத்தில் பல சவாலான மருத்துவ சூழல்கள் ஏற்பட்ட போதெல்லாம் பல ஆக்கப்பூர்வமான சித்த மருத்துவ ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி வந்தார்.

2007-ல் சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு தமிழகம் தடுமாறி, தவித்த சமயத்தில் நிலவேம்புக் குடிநீர் பயன்பாட்டினை அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு எடுத்துரைத்து தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் அரசு இயந்திரத்தின் மூலம் நிலவேம்புக் குடிநீர் சென்றடையச் செய்தார். இந்த நிகழ்வு சித்த மருத்துவத்திற்கு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டது.

அதைத் தொடர்ந்து பல விஷக் காய்ச்சல்கள் வந்தபோதும், கரோனா பெருந்தொற்றுக் காலங்களிலும் தனது வழிகாட்டுதல்களை மூலிகைமணி இதழின் மூலமும், நாளிதழில் தொடர் கட்டுரைகளின் மூலமும் அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டி வந்தார். 2009ஆம் ஆண்டு அப்போதைய சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரத்த சோகை ஒழிப்பு முகாமினை நடத்தினார்.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்றதுடன், அவரே பல மூலிகை மாநாடுகளையும், கண்காட்சிகளையும் நடத்தி மக்களிடையே சித்த மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது தமிழ்ப் பேச்சாலும், எழுத்தாலும், பல்லாயிரம் வாசகர்களை வசீகரித்தார்.

தான் மிகவும் நேசித்த தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சிறந்த சித்த மருத்துவராகவும், ஆய்வாளராகவும், பேச்சாளராகவும், இதழ் ஆசிரியாகவும், மனிதநேயமிக்க பண்பாளராகவும் திகழ்ந்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய மூலிகைமணி மருத்துவர் க.வேங்கடேசன் அழியாப் புகழுடன் மூலிகை மணத்துடன் கலந்தார்.

அவருக்கு மனைவி ருக்மணி, மகள்கள் மருத்துவர் அபிராமி, மருத்துவர் அஜிதா, மகன்கள் மருத்துவர் பாலாஜி, மருத்துவர் பாரதிராஜா, பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்