கரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா விழிப்புணர்வுப் தொடர் பிரச்சார நிகழ்வை இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் மே மாதம் முதல் வாரத்தில் நாளொன்றுக்கு 26,000 ஆக இருந்த கரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை தமிழக அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து தற்போது நாளொன்றுக்கு 2,000 நபர்களுக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இந்த அரசு பதவியேற்றவுடன் கரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு முழுவீச்சில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகள் அப்போது இருந்த எண்ணிக்கையான 95,211-ல் இருந்து 1,74,829 ஆகவும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 27,563-ல் இருந்து 53,689 ஆகவும் மற்றும் தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் 7,154-ல் இருந்து 10,571 ஆகவும் உயர்த்தப்பட்டது.
» ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை: கனிமொழி
» கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழை நேரில் வழங்கிய சபாநாயகர் அப்பாவு
சுமார் 3075 மருத்துவர்கள், 5362 செவிலியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள 7,754 சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, அவர்கள் கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதுவரை, 2 கோடியே 62 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக, நோய்த்தொற்று 2 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, மக்களின் அன்றாட பணிகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில், மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா விழிப்புணர்வுத் தொடர் பிரச்சாரத் தொடக்க விழாவினை காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கான கரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினைத் தொடங்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், SHARECHAT செயலியினையும் கரோனா பேட்ஜினையும் வெளியிட்டார். அதன்பின்பு, கரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, LED பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒருவார காலத்துக்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
* துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
* கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
* வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
* தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும்,
* மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப்போட்டிகள், கரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
* நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும்,
* கிராம அளவில் / வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கௌரவித்துப் பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வர் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago