பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூலை 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய்த்தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில், ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஜூலை 31 (இன்று) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.
மேலும், கொத்தவால் சாவடி மார்க்கெட் 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என, வணிகர் சங்கப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநகராட்சி மற்றும் காவல்துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்குத் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளின்படி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago