மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் இல்லை: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் புதிதாகத் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வரும் சூழலில், நோய்த்தொற்றுப் பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்விதத் தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தலாமா? ஊரடங்கை எவ்வாறு நீட்டிப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், காவல் உயர் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் தற்போது தமிழகத்தில் உள்ள கரோனா தொற்றுப் பரவல், அண்டை மாநிலங்களில் திடீரென தொற்று உயர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கடந்த சில வாரங்களாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும், அதனால் நோய்ப் பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கத்தில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம்.

பொது

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

Ø கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

Ø கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

Ø அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

Ø கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

Ø மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

· நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

· கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்றுப் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

· நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

· நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்றுப் பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். வருமுன் காத்தலே விவேகம்; இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்