தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாதம் அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி நாளையுடன் முடிவடைவதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை இன்றுடன் நிறுத்திக் கொண்டது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு:
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க வேதாந்தா நிறுவனம் முன்வந்தது.
இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஏப்ரல் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
ஸ்டெர்லைட் ஆக்சிஜன்:
மேலும், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் கண்காணிப்பில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கின.
முழுமையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மே மாதம் 13-ம் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து அனுப்பும் பணிகளையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூன் 3-ம் தேதி தொடங்கியது.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனும் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் மனு:
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி ஜூலை 31-ம் தேதி (இன்று) முடிவடைகிறது. கரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. மேலும், மூன்றாவது அலை எச்சரிக்கையும் உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மர்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, கரோனா பாதிப்பு முழுமையாக நீங்காததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என அவர் வாத்திட்டார். இதையடுத்து இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி விசாரணையை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உற்பத்தி நிறுத்தம்:
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் (ஜூலை 31) முடிவடையவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை நேற்றோடு நிறுத்திக் கொண்டது.
இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அளித்த அனுமதி நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஆலையின் அனைத்து இயக்கங்களும் நாளை முழுமையாக முடிவுக்கு வரும் வகையில் இன்றோடு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,132 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனை தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் எங்கள் ஆலை வளாகத்தில் 134 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டிக்கக் கோரி நாங்கள் தாக்கல் செய்த மனு வரும் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை தொடர உச்சநீதிமன்றத்தில் உத்தரவை எதிர்நோக்கியுள்ளோம்.
மின்சாரம் வேண்டும்:
ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், இருப்பில் உள்ள திரவ ஆக்சிஜனை அனுப்பி வைக்கவும் மின்சாரம் தேவை. எனவே, 2 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து ஆலைக்கு வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
நாட்டின் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உச்ச நீதிமன்றம் எந்த நேரத்தில் உத்தரவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago