நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது

By செய்திப்பிரிவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிதித்துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“ஆய்வுக் கூட்டத்தில், நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஓய்வூதியம், உள்ளாட்சி நிதித் தணிக்கை, கூட்டுறவுத் தணிக்கை, துறைத் தணிக்கை மற்றும் நிறுவனத் தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்குப் பெறப்பட்ட நன்கொடைகள், அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின் தற்போதைய நிலை குறித்தும், மே 8ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டு, ரூபாய் 305 கோடிக்கு கரோனா நோய்த்தொற்று தொடர்பான பணிகளுக்குச் செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை, பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலைக் கருவூலங்களின் செயல்பாடுகள், அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கைத் தடைகள் எழாத வண்ணம், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்திடவும், நிலுவையிலுள்ள தணிக்கைப் பத்திகளின் தற்போதைய நிலையினைக் கண்காணித்திடவும் அறிவுறுத்தினார். அரசின் வரவு - செலவுத் திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு - செலவுத் திட்டம் தயாரிப்பதில் நவீன வழிமுறைகளைக் கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகக் கேட்டறிந்த முதல்வர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்படும், திட்டத் தயாரிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், நிதித்துறைச் சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், நிதித்துறைக் கூடுதல் செயலாளர் பிரசாந்த் எம். வடநேரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்