கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 3ஆம் அலை பரவல் குறித்து எச்சரிக்கைகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசாகத் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவை ஆட்டிப்படைத்த கரோனா முதல் அலையின் வேகம் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகம் முழுவதும் 10 மாதங்கள் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு நாளைய உச்சபட்ச கரோனா தொற்று 6,900 என்கிற அளவுக்கு வந்தது. முதல் அலையில் வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முனைப்பில் அனைத்து உலக நாடுகளும் ஈடுபட்டன. 2020ஆம் ஆண்டு இறுதியில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. கரோனா முதல் அலையும் முடிவுக்கு வந்தது. இரண்டாம் அலை வர வாய்ப்புள்ளதால் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் அலை பரவல் பிப்ரவரி மாதம் மெல்லத் தொடங்கி மே மாதத்தில் உச்சம் தொட்டது. தமிழகத்தில் தடுப்பூசி போடுவதில் பொதுமக்களின் ஆர்வமின்மை, தேர்தல் பிரச்சாரத்தில் அதிக அளவில் கூடியது போன்றவை காரணமாக கரோனா தொற்று அதிக அளவில் பரவியது.
முதல் அலையின்போது தமிழகத்தின் அதிகபட்ச தொற்று எண்ணிக்கையான 6,900 என்பதை எளிதாகக் கடந்து 36 ஆயிரத்துக்கும் மேல் சென்றது. அதன் பின்னர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதல் நடவடிக்கை கரோனாவைக் கட்டுப்படுத்துவது மட்டுமே என அரசின் அத்தனை இயந்திரங்களும் கரோனா தடுப்பு நடவடிக்கையை நோக்கித் திருப்பி விடப்பட்டன.
தடுப்பூசி போடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்களும் அதிக அளவில் முன்வந்து தடுப்பூசி போடத் தொடங்கினர். அரசும் ஆக்சிஜன் பயன்பாட்டை அதிகரிப்பது, படுக்கைகள் எண்ணிக்கையைக் கூட்டுவது எனக் கடும் நடவடிக்கை எடுத்ததால் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டு தற்போது தமிழகத்தின் மொத்த தொற்று தொடர்ச்சியாகக் குறைந்துவந்து 1,756 ஆக மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஜூலை 28 அன்று பதிவானது.
கரோனா 3ஆம் அலை வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில் கேரளாவில் திடீரென கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மூன்றாம் அலையை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளுடன் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும், தளர்வுகள் காரணமாகப் பொதுமக்கள் கும்பலாக கூடுவது, முகக்கவசம் அணிவதில் காட்டப்படும் அலட்சியம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படும் சுணக்கம், கரோனா தொற்று முற்றிலும் போகாத நிலை, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சதவீதம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக தொற்றுப் பரவல் மீண்டும் மெல்லத் தலைதூக்கக் தொடங்கியுள்ளதை நிபுணர்கள் எச்சரிக்கை உணர்வுடன் பதிவிடுகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 68 நாட்களாக மெல்லக் குறைந்துவந்த எண்ணிக்கை 2 நாட்களுக்கு முன் 1,756 ஆக இருந்த தமிழக மொத்த தொற்று நேற்று 1,859 ஆக அதிகரித்துள்ளது.
68 நாட்களுக்குப் பின் மீண்டும் தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 20 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தினசரி 24,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களில் தொற்று 122, 139, 164, 181 என அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் கரோனா 2-வது அலையை மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வெளிநாடுகளிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக அழியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை ஓர் எச்சரிக்கை மணியாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பணியாற்றும் இடங்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மக்கள் சற்று அலட்சியமாக இருப்பதன் காரணமாக, 20 மாவட்டங்களில் சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரிக்கிறது.
சென்னை, மாதவரம் பகுதியில் திடீரென தொற்று அதிகரித்தது. மாநகராட்சி நடவடிக்கையால் உடனடியாகத் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர் மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா 3ஆம் அலையைத் தடுக்க முடியாது. ஆனால், அரசின் வழிகாட்டுதல், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது, கூட்டம் கூடாமல் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மூன்றாம் அலை பாதிப்பிலிருந்து நம்மைக் காத்து, ஊரடங்கையும் அமல்படுத்தாமல் தடுக்கலாம் என்பதே நிபுணர்கள் கூறும் கருத்து ஆகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago