சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் வகையில் குடியிருப்பு நலச் சங்கங்களை இணைத்துப் பராமரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (29.07.2021) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், “சென்னை மாநகரில் புயல் மற்றும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய வகையிலும், நீண்ட நாட்களுக்குப் பயனுள்ளதாகவும், அனைத்து மண்டலங்களிலும் மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், அளவு, சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்திற்கு ஏற்ப பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும், அவற்றைப் பராமரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் வகையில் பசுமை பேரியக்கமாகச் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்பொழுது, அந்தப் பணிகளுடன் சேர்த்துச் சாலைகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்படும்.
மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க ஆர்வமுள்ள குடியிருப்பு நலச் சங்கங்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரை அணுகி அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க முன்வரும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் விலையில்லாமல் வழங்கப்படும். மண்டல அலுவலர்களின் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு மரக்கன்றுகளை நட்டு, சிறப்பாகப் பராமரிக்கும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுக்கும் இப்பசுமை பேரியக்கத்தில் குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்களை ஈடுபடுத்தி மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து, வருங்காலத்தில் நம் தலைமுறை நல்ல உடல் நலத்துடன் வாழ ஏதுவாக இயற்கை சுற்றுச்சூழலுடன் கூடிய நகரமாக சென்னை மாநகரை மாற்றிட தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும்” என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், (பணிகள்), எஸ்.மனிஷ், (சுகாதாரம்) வட்டார துணை ஆணையாளர்கள் சினேகா, (வடக்கு) (பொ), ஷரண்யா அரி, (மத்தியம்), சிம்ரன்ஜீத் சிங் கலான், (தெற்கு), தலைமைப் பொறியாளர் (பூங்கா) எஸ்.காளிமுத்து, மண்டல அலுவலர்கள், குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago