தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் தேசிய நலக் குழுமத்துடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிக்சை அளித்து, மறுவாழ்வு அளிக்கும் வகையில் 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இருந்தனர்.
தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 மீட்பு வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட தொற்றுநோய் மருத்துவமனையில் காற்றில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 500 lpm திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், அமைச்சர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், 'பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்கிப் பயனடைய 55 சிறப்புக் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் காப்பகங்களில் தற்பொழுது 1,613 நபர்கள் உள்ளனர்.
இதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 2 பெண்கள் காப்பகங்கள், 3 ஆண்கள் காப்பகங்கள் என 5 காப்பகங்கள் உள்ளன. இந்த 5 காப்பகங்களில் 213 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 காப்பகங்கள் தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் அமைந்துள்ளன.
தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் தேசிய நலக் குழுமத்துடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிக்சை அளித்து, மறுவாழ்வு அளிக்கும் வகையில் 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம் அமைக்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 3 மனநல மருத்துவர்கள், 1 உளவியல் ஆலோசகர், 15 செவிலியர்கள், 2 பணியாளர்கள், 1 மருந்தாளுநர் மற்றும் 2 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை சமூகப் பணியாளர்கள் மூலமாக மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 மீட்பு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. சாலையோரங்களில் மீட்கப்படும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் மனநலம் சார்ந்த குறைபாடுகள் உள்ளனவா என, மருத்துவர்கள் மூலமாகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மனநல சிகிச்சை தேவைப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தின் பேரில் அவருடைய குடும்பத்தாருடன் செல்லவோ அல்லது மாநகராட்சி காப்பகங்களில் தங்கவோ அனுமதிக்கப்படுவர். இவர்களில் தொடர் சிகிச்சைக்கு பிறகும், மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் IMH (Institute of Mental Health)-க்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 22 லட்சத்து 2 ஆயிரத்து 97 (22,02,097) முதல் தவணை தடுப்பூசிகள், 8 லட்சத்து 73 ஆயிரத்து 195 (8,73,195 ) இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என, மொத்தம் 30 லட்சத்து 75 ஆயிரத்து 292 (30,75,292) கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் வைரஸ் தொற்று 1% கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 500 நபர்களுக்கு இன்று தொற்று நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்கள் மண்டல வாரியாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மாநகராட்சியின் 100 மினி கிளினிக் அமைந்துள்ள இடங்களில் நாளொன்றுக்கு ஒரு மினி கிளினிக்கில் 20 நபர்களுக்கு என, மொத்தம் 2,000 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் 100 மினி கிளினிக் குறித்த விவரங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/ncdclinic/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழக முதல்வர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் காற்றில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் 500 lpm திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் அமைக்க ஜியோ அறக்கட்டளையின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
பின்னர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்சி-1 ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே மூலதன மானிய நிதியில் ரூ.61.98 கோடி மதிப்பில் 476.80 மீட்டர் நீளம் மற்றும் 8.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியினைப் பார்வையிட்டார். இப்பணியானது 2022 மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும், ராயபுரம் மண்டலம், அருணாச்சலம் சாலை, கூவம் ஆற்றின் குறுக்கே மூலதன மானிய நிதியில் ரூ.9.55 கோடி மதிப்பில் கூடுதல் பாலம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டார். இப்பணியானது 2022 ஜூன் மாதத்துக்குள் முடிவுற்று பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago