சேலம் அருகே மதுப்பழக்கத்தைக் கைவிட, மந்திரித்த கயிறு கட்டி வழிபாடு நடத்தி, மது போதையுடன் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய நால்வரை போலீஸார் கைது செய்தனர். விபத்துக் காட்சிப் பதிவுகளைக் கொடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியவருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கரையாம்பாளையத்தைச் சேர்ந்த அருண் (22), அவரது நண்பர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் இருசக்கர வாகனமொன்றில், பழநி கோயிலுக்குச் சென்றுவிட்டு, கடந்த 25-ம் தேதி ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி வழியாக, அவர்கள் சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது காளிகவுண்டம்பாளையம் என்ற இடத்தில், அதிவேகமாக, தாறுமாறாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாகச் சாலையோரத்தில் விழுந்தனர். இதனால், அடுத்தடுத்து வந்த வாகனங்களில் சிக்காமல் உயிர் தப்பினர். காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, அதிவேகத்தில் அடுத்தடுத்த வாகனங்களை முந்திக்கொண்டு வந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் நிற்காமல் சென்ற காட்சி, அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு காரின் கேமராவில் பதிவானது. இந்த விபத்துக் காட்சிப் பதிவை, அந்த காரின் உரிமையாளர் போலீஸாருக்கு அளித்தார். இதனை அறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், வாகன வழக்குப் பதிவு செய்யப்படும் இ-சலான் இயங்திரம் மூலம் காரின் பதிவெண்ணைக் கொண்டு விபத்து ஏற்படுத்திய காரின் உரிமையாளரைக் கைது செய்வதற்குத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீஸார் பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), அவரது நண்பர்கள் வினோத் (32), கவுதம்ராஜ் (31), அருண்குமார் (28) ஆகியோரைக் கைது செய்து, விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக, சங்ககிரி அருகே ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு, அங்குள்ள பூசாரி ஒருவரிடம் பூஜை செய்து மந்திரித்த கயிறை வாங்கிக் கட்டிக் கொண்டு, பின்னர் சொந்த ஊர் புறப்பட்டனர். மது போதையில் இருக்கும்போதுதான் மந்திரித்த கயிறைக் கையில் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் கைகளில் தாயத்துக் கயிறைக் கட்டிக் கொண்டு, உடனேயே காரில் சென்று விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''விபத்து ஏற்படுத்திய கார் சென்றதை, அவ்வழியாகச் சென்ற மற்றொரு காரில் சென்றவர் கவனித்து, விபத்து வீடியோ பதிவைக் கொடுத்து, வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட உதவி இருக்கிறார். அவர் அவசர வேலையாகச் சென்றாலும், மனிதாபிமானத்தோடு செயல்பட்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், ஹெல்மெட் அணிந்திருந்ததால், விபத்தில் உயிர் தப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகத்தில் சென்றாலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டினாலும், உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினாலும் கைது செய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.
விபத்துக் காட்சிப் பதிவை கொடுத்த கார் உரிமையாளருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago