கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள்: 3-ம் நாளில் 1.25 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

By சி.கதிரவன், வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் 10 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவின் 3-ம் நாளான நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

தென்னகத்தின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 வைணவத் தலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த ஆண்டு மகாமகப் பெருவிழாவின் தொடக்கமாக கடந்த 13-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களிலும், 14-ம் தேதி சக்கரபாணி உள்ளிட்ட 5 வைணவத் தலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி முதல் மகாமகக் குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் சென்றவண்ணம் உள்ளனர்.

24 மணி நேரமும் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆறு ஆகிய இடங்களில் நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 13-ம் தேதி சுமார் 1 லட்சம் பேரும், நேற்று முன்தினம் ஒன்றரை லட்சம் பேரும், நேற்று 1 லட்சத்து 25 ஆயிரம் பேரும் மகாமகக் குளத்தில் நீராடினர். பின்னர் அங்கிருந்து பொற்றாமரைக் குளத்துக்கும், காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, சக்கரப் படித்துறைக்கும் சென்று நீராடினர்.

மகாமகக் குளத்தில் நீராடிய பின் பக்தர்கள் அருகில் உள்ள காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அதேபோல, பொற்றாமரைக் குளத்தில் நீராடிய பக்தர்கள் சாரங்கபாணி, ராம சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள், சக்கரபாணி ஆகிய வைணவ கோயில்களில் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அதை பொருட் படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் மகாமகக் குளத்தில் நீராடினர்.

மகாமகப் பெருவிழாவில் குறைகளா?

பக்தர்களுக்காக நகராட்சி சார்பில் தற்காலிக கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆறு ஆகிய இடங்களில் புனித நீராடிய பக்தர்களிடம் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் நேற்று குறைகளைக் கேட்டார். நகராட்சி சார்பில் வேறு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, மகாமகத்துக்கு வரும் பக்தர்களிடம் கருத்து கேட்டு உடனுக்குடன் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். பக்தர்கள் கோரிக்கை விடுத்தபடி குளக்கரையில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தில் இறங்கி, ஏறுவதற்கு வசதியாக தற்காலிகமாக கைப்பிடி வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குளங்களில் விட்டுச் செல்லும் துணிகள் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது. மகாமகம் தொடர்பான குறைகளையும், நிறைகளையும் 95660 58888 என்ற எண்ணுக்கு பக்தர்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



மகாமகப் பெருவிழாவின் 3-ம் திருநாளான நேற்று ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வெள்ளி சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கும்பேஸ்வரர். அடுத்த படம்: வெள்ளி தாமரை வாகனத்தில் அருள்பாலித்த மங்களாம்பிகை



விழா துளிகள்:

பெண் பக்தர்கள் உடைமாற்ற…

மகாமகக் குளத்தில் நீராடிவிட்டு வரும் பெண் பக்தர்கள் உடைமாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் மகாமகக் குளத்தின் மேல் கரையில் நகராட்சி விடுதி அருகே 2 இடங்களில் பெண்கள் உடைமாற்றுவதற்காக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொசுவைத் தடுக்க ஆயில் பால்

கும்பகோணத்தில் கொசுக்களைத் தடுக்க சாக்கடை பகுதிகளில் ஆயில் பால்கள் போடப்படுகின்றன. இதனால் கொசுக்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அதே நேரத்தில் மகாமகக் குளத்தின் கரைகள் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தினமும் காலை முதல் மாலை வரை 3 முறை கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து அடிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சிப் பணியாளர்கள் 20 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

உணவு விலை திடீர் அதிகரிப்பு

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஹோட்டல்களில் இட்லி ரூ.12, தோசை ரூ.50 என விலையை தங்களது விருப்பத்துக்கு ஏற்ப திடீரென உரிமையாளர்கள் உயர்த்திவிட்டனர் என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஏற்கெனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் 300 சதவீதம் அதிகரித்துவிட்ட நிலையில், உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பக்தர்களுக்கு உதவிய போலீஸார்

மகாமகக் குளத்தில் பக்தர்கள் ஒவ்வொரு தீர்த்தக் கிணறுக்கும் சென்று தண்ணீரை குவளையில் எடுத்து தலையில் ஊற்றிக்கொள்கின்றனர். தீர்த்தக் கிணறுகளின் அருகே பக்தர்களின் கூட்டம் நேற்று அதிகமாக இருந்ததால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தண்ணீரை வாளியில் இறைத்து பக்தர்களின் மீது தெளித்த வண்ணம் இருந்தனர். போலீஸாரின் இந்த செயலை பக்தர்கள் பலரும் வரவேற்றனர்.

துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம்

மகாமகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள சவுராஷ்டிரா சமூகத்தினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காந்தியடிகள் சாலையில் உள்ள மண்டபத்தில் தினமும் சமையல் செய்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு அன்ன தானம் செய்து வருகின்றனர். வரும் 22-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து அன்ன தானம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆர்வத்துடன் வரும் வெளிநாட்டினர்

இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டினர் பலரும் மகாமகம் நடைபெறுவதை கேள்விப்பட்டு, கும்பகோணத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் வெளிநாட்டினர் மகாமகக் குளத்தில் பக்தர்கள் புனித நீராடுவதை புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும், விழாவைப் பற்றி வழிகாட்டிகளிடம் கேட்டு அறிந்துகொண்டு தங்கள் தலையில் புனித நீரைத் தெளித்துக் கொள்கின்றனர். நேற்று ஜப்பான் நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் புனித நீராடுவதை அதிசயத்துடன் பார்த்தனர்.



மகாமகக் கோயில்களில் இன்று…



மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்:

மகாமகப் பெருவிழாவின் 4-ம் திருநாள் - சுவாமி, அம்பாள் கண்ணாடி பல்லக்கில் ஏகாசனம், அறுபத்து மூவர் மஞ்சங்களில் புறப்பாடு- இரட்டை வீதிவலம், காலை 8, சுவாமி, அம்பாள் ஏகாசனத்தில் யானை அம்பாரியில் புறப்பாடு, இரவு 7.

சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்:

மாசிமக பிரம்மோற்சவம்- பல்லக்கு, காலை 8, இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 7.

ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்:

மாசிமக பிரம்மோற்சவ விழா 4-ம் நாள் - பல்லக்கு, காலை 8, யானை வாகனம், அன்னபட்சி வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா, மாலை 6.

பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்:

மகாமகப் பெருவிழா- அதிகார நந்தி, காமதேனு வாகனம், இரவு 7.

விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்:

மகாமகப் பெருவிழா - பல்லக்கு, காலை 8, யானை வாகனம், சிம்ம வாகனம், இரவு 7.

ராஜகோபால சுவாமி கோயில்:

மகாமக விழாவின் 3-ம் திருநாள்- வெள்ளிப் பல்லக்கு, காலை 8, சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8.

சக்கரபாணி சுவாமி கோயில்:

மாசி மகப் பெருவிழாவின் 3-ம் நாள்- பல்லக்கு, காலை 8, சேஷ வாகனத்தில் வீதியுலா, இரவு 7.

சாரங்கபாணி கோயில்:

மகாமகப் பெருவிழா- வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு, காலை 8, வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு, இரவு 7.

ராம சுவாமி கோயில்:

மகாமகப் பெருவிழா - பல்லக்கு, காலை 9, சேஷ வாகனம், இரவு 7.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்