பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் கம்பெனியைப் புகுத்திய மத்திய அரசால் விவசாயிகள் பாதிப்பு: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு தனியார் கம்பெனிகளைப் புகுத்தியதால் லாப நோக்கில் செயல்படும் அந்நிறுவனங்கள் இந்த ஆண்டு பயிர்க் காப்பீடு பிரீமியம் தொகையை வசூலிக்காமல் உள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதைத் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பாஜக அரசு தனியார் நிறுவனங்களைப் புகுத்தியது. இதன் விளைவாக விவசாயிகளுக்கு உரிய காலத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்காமலும், பாதிப்பின் அளவைக் குறைப்பது, காப்பீட்டுத் தொகையைக் குறைப்பது, அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பது என இத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்தது மத்திய பாஜக அரசு.

இந்த நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கான பிரீமியம் தொகை விவசாயிகளிடமிருந்து பெறப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன் தொகையிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். அந்த வகையிலும் இதுவரை பிரீமியம் பிடிக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடிக்கான காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்குக் கிடைக்க வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

காப்பீட்டு நிறுவனங்கள், மத்திய - மாநில அரசுகளின் பங்குத் தொகையை உயர்த்திடக் கோரியும் பிரீமியம் தொகையை அதிகரிக்கக் கோரியும் வற்புறுத்துவதால் இதில் முடிவு எட்டப்படாத நிலையில் எந்தக் காப்பீட்டு நிறுவனமும், பயிர் காப்பீடு செய்ய முன்வரவில்லை என்று தெரியவருகிறது.

எனவே, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு குறுவை சாகுபடிக்கான பிரீமியம் தொகை விவசாயிகளிடமிருந்து பெறவும், இதற்கேற்ப பிரீமியம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்து வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையென்றால், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். கால நீட்டிப்பு செய்யும்போது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்புதலைப் பெறாத காரணத்தினால் பிரீமியம் செலுத்தியும் விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பெரும் இழப்புக்கு ஆளாயினர்.

இன்னமும் 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, பயிர்க் காப்பீட்டு பாக்கித் தொகையைப் பெற்றுத் தரவும் தமிழக அரசு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்