மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ச்சியாக போராடுவதென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
"மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் அறிக்கையை இன்று (ஜூலை 26) பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார். அவ்வறிக்கை பின்வருமாறு:
"நூற்றாண்டு விழா கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
» பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் சந்திப்பு: தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை
» கல்லூரி மாணவர் சேர்க்கை; வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துக: ராமதாஸ்
அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கியூபா புரட்சியை சீர்குலைக்கும், வகையில் அமெரிக்க வல்லரசு தொடர்ந்து சீரழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபை கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தடையை நீக்க மறுக்கும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி கியூப அரசை கவிழ்க்க முயல்கிறது. இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடி வரும் கியூப மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம் -எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 29.7.2021 அன்று சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ (எம்) தலைவர்கள் நூற்றாண்டு
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழக பொதுவுடமை இயக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக திகழும் ன். சங்கரய்யா நூற்றாண்டு பிறந்த நாளை கண்டுள்ளார். அவருக்கு மாநிலக்குழு தன்னுடைய புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய பிறந்த நாள் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களால் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட விழாவாக மாறியது. இது அவரது தூய பொதுவாழ்வுக்கும், தடுமாறாமலும், தடம் மாறாமலும் ஒரு கம்யூனிஸ்ட்டாக அவர் வாழ்ந்துள்ள நிறை வாழ்வுக்கும், அவரைப்போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட வழிநடத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்த பெருமையாகும்.
அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்ட வேண்டும். அவருடைய பிறந்த நாளில் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த, சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா ஆகியோருக்கும், அனைத்து கட்சி தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் மாநிலக்குழு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேபோல, இதேகாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளான மறைந்த தோழர்கள் ஏ. நல்லசிவன், ஆர். உமாநாத், ஏ. பாலசுப்பிரமணியன், கே. முத்தையா ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களையும் கொண்டாட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது,
மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள்
மத்திய பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்க அந்நிய நாட்டு உளவு அமைப்பை பயன்படுத்தி பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
வேளாண் துறையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் 250 நாட்களுக்கும் மேலாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட மத்திய அரசும், பிரதமரும் தயாராக இல்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடூரமான சட்டங்களை பயன்படுத்தி மனித உரிமை போராளிகளையும், ஜனநாயகத்திற்காக போராடுபவர்களையும் நரேந்திர மோடி அரசு வேட்டையாடி வருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் தேவையா? என உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
திரைப்படத்துறையை அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 'சினிமா ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா - 2021, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தங்கள்ஆகியவை ஜனநாயகத்தை முடக்கும் நோக்கம் கொண்டவை.
இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை கொண்டு வந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் அழிக்க மத்திய பாஜக அரசு உத்தேசித்துள்ளது. வரலாறு காணாத விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவோ, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவோ மத்திய அரசு கிஞ்சிற்றும் செயல்படவில்லை. இத்தகைய மத்திய நரேந்திர மோடி அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவது என மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இந்திய மக்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது. ஏற்கெனவே சில்லரை எரிபொருள் வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ள மோடி அரசு தற்போது மொத்த விற்பனையையும் அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்ற முடிவு நாட்டின் சுயசார்பு தூணை தகர்க்கும் செயலாகும். தமிழகத்தில் நீட் தேர்வை திணிப்பது போன்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் 250 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதுடெல்லி சென்று 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்கும் தமிழக விவசாயிகளுக்கு கட்சியின் மாநிலக்குழு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசுக்கு முடிவு கட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக வாக்காளர்கள் அமோகமாக வாக்களித்து திமுக தலைமையிலான அரசை பதவியில் அமர்த்தியுள்ளனர். மதவெறி சக்திகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும் நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறுவதை சாத்தியமாக்கிய தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வந்த அதிமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்கள், அவற்றின் மூலமாக கட்டமைக்கப்பட்ட பாஜக - அதிமுக எதிர்ப்பு மனநிலை ஆகியவை அதிமுக - பாஜக கூட்டணியை நிராகரித்து, திமுக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய காரணமாக அமைந்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற போது கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பெரும் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. எனினும், திமுக அரசு இதை சமாளித்து பெருமளவு மக்களை காப்பாற்றியுள்ளது. மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில் மருத்துவ கட்டமைப்பை தக்க வைத்து மேம்படுத்த வேண்டுமெனவும், அனைவருக்கும் தட்டுப்பாடின்றி இலவச தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வரவேற்கத்தக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் பெரும் நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் இந்த அரசை பதவியில் அமர்த்தியுள்ளனர். மக்களின் நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசின் செயல்பாடு எதிர்காலத்திலும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் பாசன வசதியும், கட்டமைப்பும் பெருமளவு மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்கிற முயற்சிகளை மேற்கொள்ளவும், ரங்கராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
அதிமுக அரசின் ஊழல் - முறைகேடுகள்
தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு அனைத்து வகைகளிலும் மதவெறி பாஜகவுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டது. அனைத்து துறைகளிலும் ஊழலும் முறைகேடுகளும் நீக்கமற நிறைந்திருந்தது. அனைத்து பணி நியமனங்களும், இடமாறுதலும் பண அடிப்படையிலேயே நடைபெற்றது.
ஆட்சியிலிருந்த காலத்திலேயே முதல்வர், துணை முதல்வர், பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், முந்தைய ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல் - முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களை தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமையை மீட்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பட்டியலின மக்களின் சமூக விடுதலை, பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் எதிர்ப்பு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் உள்ளிட்ட தமிழக மக்களின் நலன் காக்க சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago