கல்லூரி மாணவர் சேர்க்கை; வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்று தொடங்கியுள்ளது. அதில், வன்னியர்கள் 10.5% உள் இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விவரக் குறிப்பிலும், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விவரக் குறிப்பிலும், மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீட்டு முறை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்குமான தகுதி மதிப்பெண் குறித்த விவரங்களிலும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் பிரிவு குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆன்லைன் விண்ணப்பத்திலும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் பிரிவு இடம் பெறவில்லை. இவையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? என்பது தெரியவில்லை. எப்படியாயினும் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி; ஏற்க முடியாது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பங்கை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

1980-ம் ஆண்டில் தொடங்கி 1989-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாக, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எங்களை அழைத்து பேச்சு நடத்திய அப்போதைய அரசு, வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கி வன்னியர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இது ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்த வரலாறு.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காததால் தான், வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு கோரி கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கி, இந்த ஆண்டின் தொடக்கம் வரை 6 கட்ட போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாமகவும் நடத்தின.

அதன் பயனாகத் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதில், வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீடு 26.02.2021 முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்தும்படி அனைத்துத் துறைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் கடந்த 02.03.2021 அன்று கடிதம் எழுதியுள்ளது.

அதைப் பின்பற்றி சட்டப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர் 10.50% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உயர்கல்வித் துறையின் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மட்டும் வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அதற்கு தடை விதிக்க மறுத்து விட்டார்கள். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை முழுமையாக படித்துப் பார்த்தேன்; அதில், அனைத்தும் சரியாகவே உள்ளது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுப்பது மிகப்பெரிய அநீதி.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறலாம்... காட்சிகளும் மாறலாம். ஆனால், சட்டங்கள் நிரந்தரமானவை. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்றுக் கொள்ளும் முதல்வரும், அமைச்சர்களும், அவர்களுக்கு வழிகாட்டும் அதிகாரிகளும் சட்டங்களை செயல்படுத்த வேண்டும்; அது அவர்களின் கடமை. மாறாக, மக்களின் பிரதிநிதிகளால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை செயல்படுத்த மறுப்பது சம்பந்தப்பட்ட சட்டத்தை மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் ஆகும்.

வன்னியர் இட ஒதுக்கீட்டு குறித்து தமிழக சட்டப்பேரவையில் பாமகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி பேசியபோது, அதற்கு விடையளித்த முதல்வர், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பல முறை அதை உறுதிப்படுத்தினார்.

அதற்குப் பிறகும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்தாமல் உயர்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடுவது சமூக நீதிக்கு எதிரான செயலாகும். இதை தமிழக முதல்வர் அனுமதிக்கக் கூடாது.

வன்னியர் இட ஒதுக்கீடு என்பது எளிதில் கிடைத்துவிடவில்லை. காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் 21 உயிர்களை பலி கொடுத்து, 42 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி, லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் சிறைவாசத்தையும், கொடுமைகளையும் அனுபவித்து தான் இந்த சமூகநீதியை வென்றெடுத்தோம். அந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.

மிக மிக பின்தங்கிய நிலையிலுள்ள வன்னியர்களுக்கு சமூக நீதியை மறுப்பதன் மூலம் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளிவிடக் கூடாது.

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககமும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும் வெளியிட்டுள்ள சமூக நீதிக்கு எதிரான மாணவர் சேர்க்கை அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதற்கு மாற்றாக வன்னியர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கிய புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்