கோலாகலமாக தொடங்கியது மகாமகம்: முதல் நாளில் 50,000 பக்தர்கள் புனித நீராடினர்

By கல்யாணசுந்தரம், வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் 12 ஆண்டுக ளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கொடியேற் றத்துடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

மாசி மாதத்தில் குரு சிம்ம ராசி யிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும்போது முழு நிலா நாளில் மக நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடி வரும் நாளே மகாமகத் திருநாள் எனப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி எனப்படும் புனித நீராடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 12 ஆண்டு களுக்குப் பிறகு மகாமகத் தீர்த்தவாரி பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற் றது. இதேபோன்று, சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழ சோமேஸ்வரர், பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர், ஞானாம்பிகை உடனாய காளஹஸ்தீஸ்வரர், அமுதவள்ளி உடனாய அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் பகல் 12.40 மணிக்கு கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க.அன்பழகன், ரங்கசாமி, துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் க.பாஸ்கரன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், தருமபுரம் ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், திருவாடுவதுறை ஆதீனகர்த்தகர் அம்பலவாண தேசிக பரமாச்சாரியர், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகல் 1.30 மணியளவில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்ட உற்சவருக்கு மயிலாடுதுறை சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் மங்கள பூஜை, கங்காபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டு, 101 வேதவிற்பன் னர்கள் வேத கோஷங்களை முழங்க, மகாமகக் குளத்தில் அமைச்சர்கள், ஆதீனகர்த்தகர்கள் புனித நீராடினர்.

நேற்று காலை முதல் மாலை வரை 50,000 பக்தர்கள் நீராடியதாக தெரிவிக்கப்பட்டது.

மகாமகப் பெருவிழா கொடி யேற்றத்துக்குப் பிறகு மகாமகக் குளத்தில் ஆதீனகர்த்தகர்கள் புனித நீராடி, தீர்த்தமாடல் நிகழ்வை பகல் 1.30 மணியளவில் தொடங்கிவைத்தனர்.

முன்னதாக, விசாலாட்சி உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயிலில் பகல் 12.30 மணியளவில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஜெயந்திரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் மகாமக தீர்த்தக் குளத்தில் நீராடினார். பின்னர் அவர் கூறியபோது, “மனித வாழ்வில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்களை இந்த குளத்தில் நீராடி போக்கிக் கொள்ளலாம்” என்றார்.

6 சிவன் கோயில்களில் கொடியேற்றம்: வைணவத் தலங்களில் இன்று கொடியேற்றம்

கும்பகோணம் சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் 10 நாள் மகாமக உற்சவம் நேற்று தொடங்கியது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கும்பகோணத்தில் இவ்வாண்டு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இன்று (பிப்ரவரி 14) வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராம சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 5 கோயில்களில் மகாமகப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற உள்ளது.

மகாமகத்தையொட்டி 10 நாட்கள் நடைபெறும் உற்சவங்களின்போது, காலை, மாலை என இருவேளைகளிலும் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். இந்த 10 நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நேற்று நடைபெற்ற ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் 4-ம் திருநாளான பிப்ரவரி 16-ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற உள்ளது. 5-ம் திருநாளன்று (பிப்ரவரி 17) ஓலைச்சப்பரம் நடைபெற உள்ளது.

3 மகாமகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா...

தமிழக முதல்வர் ஜெயல லிதா மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறும் நாளும் அவரது பிறந்த நட்சத்திர நாளேயாகும்.

முதல் முறை ஜெயலலிதா முதல்வரான பிறகு 1992-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகப் பெருவிழாவில் பங்கேற்றார். அதன்பின் 2004-ம் ஆண்டு மகாமகத்தின்போது முதல் வராக ஜெயலலிதா இருந்தார். தற்போது 2016-ம் ஆண்டு நடைபெறும் மகாமகத்தின் போதும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா பிறந்த பிறகு நடைபெறும் 6-வது மகாமகம் இது. இதில் 1992, 2004, 2016 ஆகிய 3 மகாமகங்களின்போது அவரே தமிழக முதல்வர். தமிழக முதல்வர்களில் 3 மகாமகங்களின் போது முதல்வராக இருந்த சிறப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

அதிகாரிகள் ஆய்வு

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப் பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முகமணி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.பாஸ்கரன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் பனீந்திரரெட்டி ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கும்பகோணம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் ஆகியோருடன் ஆய்வு மேற் கொண்டனர்.

மகாமகக் குளத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக இரண்டரை அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மேலும், அரசலாற்றிலிருந்தும், நகராட்சியின் ஆழ்குழாய் பம்புசெட் வாயிலாகவும் தண்ணீர் விடும் பணிகளை பொதுப்பணித் துறையின் காவிரி கோட்ட தலைமைப் பொறியாளர் அசோகன் நேற்று ஆய்வு செய்தார்.

மகாமகக் குளத்தில் நீராடிய மத்திய அமைச்சர், பிரபலங்கள்

கும்பகோணத்தில் நேற்று தொடங்கிய மகாமகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்களுடன் பிரபலங்களும் நீராடினர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து மகாமகக் குளத்தில் இறங்கி, தலையில் நீரை தெளித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது சகோதரர்களுடனும், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன் உள்ளிட்ட பலரும் மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர் களிடம் கூறியபோது, “கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதியை தமிழக அரசு, தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மகாமக குளத்தில் நீராடி வாழ்க்கையை பொதுமக்கள் இன்பமயமாக வாழ வேண்டும். இந்த விழாவின் மகிமையை உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை அறிந்து மத்திய அரசு மகாமகத் திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

விழாத் துளிகள்…

அதிகாலை முதலே...

சிவன் கோயில்களில் கொடியேற்றிய பின்னரே மகாமகக் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தும் நேற்று அதிகாலை முதல் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் மகாமக குளத்தில் நீராட பக்தர்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கெடுபிடி இல்லாமல் குளத்தில் இறங்கி ஒவ்வொரு தீர்த்த கிணறுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் நீராடினர்.

அதிகரித்த செல்பி…

காமகக் குளத்தில் பக்தர்கள் நீராடுவதை தங்களுடைய செல்போன்களில் புகைப்படம் எடுப்பதும், பலர் குளத்துடன் செல்பி எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர். குளத்தில் இரண்டரை அடி தண்ணீர் மட்டுமே இருந்தால் ஏராளமான சிறுவர்கள் உற்சாகமாக தண்ணீரில் துள்ளிக் குதித்து விளையாடினர்.

உள்ளூர் மக்கள் அவதி…

காமகப் பெருவிழாவுக்கு நேற்று காலை முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர். குளத்தின் கரை பகுதியில் கூட்டம் குறைவாக இருந்தபோதிலும் காலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்காததால் உள்ளூர் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். உள்ளீக்கான் சந்தில் காலை முதல் மாலை வரை இரும்புத் தடுப்புகளை கொண்டு சாலையை அடைத்ததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

கொடியேற்றத்தில் நெரிசல்…

திகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றபோது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாதுகாக்கும் பணியில் மட்டுமே போலீஸார் ஈடுபட்டனர். மாறாக கோயிலுக்குள் செல்லும் வழியில் பாதுகாப்புக்கு ஒரு போலீஸார் கூட இல்லாததால் மக்கள் கோயிலுக்குள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் முடியாமல் நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

வாசலில் ஆதீனகர்த்தர்கள்…

திகும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துக்கு பகல் 12.30 மணிக்கு மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர்கள் மேளதாளம் முழங்க வந்தனர். ஆனால், அவர்களால் கூட்ட நெரிசலைக் கடந்து கொடிமரம் அருகே செல்ல முடியவில்லை. இதனால் வாசலிலேயே ஆதீனகர்த்தர்கள் நின்று கொடியேற்றத்தை தரிசித்தனர்.

தன்னார்வலர்களுக்கு உதவி தேவை

காமகக் குளத்தில் நீராடிய பின்னர், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்துதரப்படவில்லை என தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்” என்றார்.

மகாமகக் கோயில்களில் இன்று…

* மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா- இரண்டாம் திருநாள் - வெள்ளிப் பல்லக்கு உலா, காலை 8, சுவாமி, அம்பாள் சேஷ வாகனம், இரவு 7.

* சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: மாசி மக பிரம்மோற்சவம்- பல்லக்கு, காலை 8, இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 7.

* ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்: மாசிமக பிரம்மோற்சவ விழா- இரண்டாம் நாள் - பல்லக்கு, காலை 8, சேஷ வாகனம், கமல வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, மாலை 6.

* பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா- சூரியப் பிரபை, சந்திர பிரபை, இரவு 7.

* விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: மகாமகப் பெருவிழா - பல்லக்கு, காலை 8, சேஷ வாகனம், இரவு 7.

* ராஜகோபால சுவாமி கோயில்: மகாமக விழா- முதல் திருநாள் - கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.

* சக்கரபாணி சுவாமி கோயில்: மாசிமகப் பெருவிழா- ரதசப்தமி உள்புறப்பாடு, காலை 7, கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானம், இரவு 7.

* சாரங்கபாணி கோயில்: மகாமகப் பெருவிழா- பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளுதல், கொடியேற்றம், காலை 8.45, தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு, இரவு 7.

* ராம சுவாமி கோயில்: மகாமகப் பெருவிழா - கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானம், இரவு 7.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்