தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சென்டிமென்டை குறிவைத்து கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றும் வகையில் திமுக, அதிமுக கட்சிகள் பணியைத் தொடங்கியுள்ளன. இத்தொகுதியில் போட்டியிடக் கேட்டு முக்கிய கட்சிகள் தரப்பில் விருப்ப மனுக்கள் அதிக அளவில் குவிந்துள்ளன.
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிவாகை சூடும் கட்சியே, தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருவது கடந்த 40 ஆண்டுகாலமாக நிரூபணமாகி வருகிறது. தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று திகழும் இத்தொகுதியை, வரும் சட்டசபை தேர்தலில் கைப்பற்ற முக்கிய கட்சிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்தி போட்டியிடச் செய்வதற்கான முயற்சி மும்முரமாக நடந்து வருகிறது.
இழந்த தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் திமுக காய் நகர்த்தி வருகிறது. அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்பி ஆஸ்டின், பொருளாளர் கேட்சன் ஆகியோர் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடக்கேட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விண்ணப்பித்துள்ளனர்.
இதுபோல் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதியும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து தாமரை பாரதி கூறும்போது, `திமுகவை பொறுத்தவரை எந்த வேட்பாளர் போட்டியிடுவது என்பது முக்கியமில்லை. கட்சி தலைமை அறிவிக்கும் யார் போட்டியிட்டாலும் இத்தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக திமுகவின் முந்தைய ஆட்சியில் கன்னியாகுமரியில் மேற்கொண்ட நலத்திட்டங்கள், தற்போதைய ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்து நிறைவேறாமல் இருக்கும் திட்டங்கள் போன்றவற்றை மக்கள் முன்கொண்டு சென்று பணியாற்ற உள்ளோம். அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் வெல்லும் கட்சியே ஆட்சிபீடத்திலும் அமரும் என்பதால், வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’ என்றார் அவர்.
தக்கவைக்க அதிமுக முயற்சி
அதிமுகவை பொறுத்தவரை கன்னியாகுமரியில் போட்டியிட தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஏராளமானோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலுமே அதிமுக வெற்றிபெறும் இலக்கை மாவட்டச் செயலாளர் தளவாய்சுந்தரத்துக்கு கட்சி தலைமை கொடுத்திருப்பதால், அவர் தான் விருப்ப மனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
அதே நேரம் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ பச்சைமால், கவிஞர் சதாசிவம், அரசு வழக்கறிஞர் பாலஜனாதிபதி உட்பட ஏராளமானோர் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, `கன்னியாகுமரி தொகுதி மட்டுமல்ல. மாவட்டம் முழுவதும் உள்ள 6 தொகுதிகளிலும் வெற்றிபெறும் கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதை மையமாக வைத்து மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
அதிமுகவைப் பொறுத்தவரை தலைமை அறிவிக்கும் எந்த வேட்பாளராக இருந்தாலும் பாரபட்சமின்றி முழுதேர்தல் பணியாற்றி வெற்றிபெறச் செய்வோம். இதற்கு அடித்தளமாக அதிமுக அரசின் சாதனைகள் கைகொடுக்கும்’ என்றார் அவர்.
இதுபோல் கடந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியும் கன்னியாகுமரி தொகுதியை குறிவைத்துள்ளது. வசந்தகுமார் உட்பட அக்கட்சியை சேர்ந்த பலரும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். குமரி மாவட்ட பிரமுகர்கள் கட்சி தலைமைக்கு விருப்ப மனுவை நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அசோகன் சாலமன் கூறும்போது, `கடந்த தேர்தலில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியிருந்த நிலையில் வரும் தேர்தலில் 6 தொகுதிகளையுமே இலக்காக வைத்துள்ளோம். மேற்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளையும் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. கிள்ளியூரில் போட்டியிட நான் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றார் அவர்.
காங்கிரஸ் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலையா கூறும்போது, `எனது சொந்த தொகுதி குளச்சல் என்பதால் நான் குளச்சலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். அதே நேரம் எனது பொறுப்பில் வரும் கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற்றே தீருவோம். அதே நேரம் தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்து இதற்கான முடிவை கட்சி தலைமைக்கு வலியுறுத்துவோம்’ என்றார்.
இதுபோல் பாஜக, கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளும் கூட்டணி முடிவுக்காக கன்னியாகுமரி தொகுதியை நோக்கி காத்திருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், சென்டிமென்ட் தொகுதியில் அனைத்து கட்சியில் இருந்தும் விஐபி வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago