பெகாசஸ் விவகாரம்; ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார்: தடுத்து நிறுத்திய போலீஸார்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இஸ்ரேல் நாட்டில் என்.எஸ்.ஓ. என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் 50-க்கும் மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தனி நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக, வாஷிங்டன் டைம்ஸ், தி வயர் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனால் உலகத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், இரண்டு மத்திய அமைச்சர்கள், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செல்போன்களும், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன்களும் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் முடங்கியது. இதனிடையே, எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷா விலகக் கோரியும், நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (ஜூலை 22) போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தமிழக ஆளுநர் மாளிகை வரை மாபெரும் பேரணி நடைபெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை பகுதியில், தமிழக காங்கிரஸ் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி காங்கிரஸார் முற்றுகையிட முயன்றதால், போலீஸாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார், கே.எஸ்.அழகிரி உட்பட முக்கியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE