தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வேலூர் மத்திய ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி,செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக சிறைச்சாலைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள மருத்துவமனை, சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினிமற்றும் சாந்தன் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

அதில் முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்களிடம், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் விடுப்பு வழங்க முடியும். அதனை நீட்டிக்கவும் செய்ய முடியும்.

ஆனால், நீண்ட நாட்கள் விடுப்புஎன்பது வழங்க முடியாது. நீண்டநாட்கள் விடுப்பு குறித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவரிடம் தெளிவாக கூறியுள்ளோம்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறைக் கைதிகளால் தொரப்பாடி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு தரப்படும்.

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆய்வின்போது, அமைச்சர் ஆர்.காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு) கார்த்திகேயன் (வேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி ஆட்சியர் விஷ்ணு பிரியா, சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி, சிறைத் துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE