நீண்ட காலம் போராடி நிறைவேறாத கோரிக்கையை நிறைவேற்றியது மகிழ்ச்சி: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நெகிழ்ச்சி

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து வெட்டிக்காட்டுக்கும், கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுகள் போராடியும் நிறைவேற்றப்படாத கோரிக்கையைத் தான் சட்டப்பேரவை உறுப்பினராகி நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக இடதுசாரி எம்எல்ஏ எம்.சின்னத்துரை தெரிவித்தார்.

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லாக்கோட்டை 4 சாலை, மருதன்கோன் விடுதி, மூவர்ரோடு, மணமடை, செங்கமேடு வழியாக கந்தர்வக்கோட்டையில் இருந்து வெட்டிக்காட்டுக்கு அரசு நகர் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேருந்தானது, தினமும் காலை 11 மணிக்கு கந்தர்வக்கோட்டையில் இருந்தும், மதியம் 12.15 மணிக்கு வெட்டிக்காட்டில் இருந்தும் புறப்பட உள்ளது.

இதேபோன்று, கறம்பக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவர்ரோடு, அங்கன் விடுதி, புதுக்கோட்டை விடுதி, பாப்பாபட்டி, கீராத்தூர், நாஞ்சிக்கோட்டை வழியாக கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு புறநகர் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேருந்தானது, தினமும் மாலை 3 மணிக்கு கறம்பக்குடியில் இருந்தும், மாலை 5.45 மணிக்குத் தஞ்சாவூரில் இருந்தும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு பேருந்து சேவைகளை கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர் இளங்கோவன், வணிக மேலாளர் சுப்பு, கிளை மேலாளர்கள் ராமையா, சுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பரமசிவம், தமிழய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"இவ்விரு வழித்தடங்களிலும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என இடதுசாரிகள் சார்பில் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நிறைவேறாத கோரிக்கையைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தற்போது நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள்" என எம்எல்ஏ எம்.சின்னத்துரை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE