தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் மாவட்டத்துக்கு இன்று வந்தார். வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்குச் சென்ற அமைச்சர், அங்குள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறை ஆகியவை குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, சிறையில் பின்பற்றப்படும் நடைமுறைகள், அங்கு நடைபெற்று வரும் விவசாயம், தோல் தொழில் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் தனிச்சிறைக்கு சென்ற அமைச்சர் ரகுபதி, அங்கும் ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் சிறையில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் ரகுபதியை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, சிறையில் ஆய்வு முடித்து வெளியே வந்த அமைச்சர் ரகுபதி அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 742 கைதிகளும், பெண்கள் தனிச் சிறையில் 97 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக சிறைச் சாலைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு நடத்த இங்கு வந்துள்ளேன்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள மருத்துவமனை, சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி மற்றும் சாந்தன் உள்ளிட்ட கைதிகள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டேன்.
அதில், முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்களிடம், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் விடுப்பு வழங்க முடியும். அதனை நீட்டிக்கவும் செய்ய முடியும்.
ஆனால் நீண்ட நாட்கள் விடுப்பு என்பது வழங்க முடியாது. நீண்ட நாட்கள் விடுப்பு குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அனுமதி பெற்றுக்கொண்டால் அதனைச் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவரிடம் தெளிவாகக் கூறியுள்ளோம்.
அதேபோல, சிறையில் உள்ள பிற கைதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளனர். வேலூர் சிறையில் காலணி தயாரிப்பு, நெசவுத் தொழிலில் கைதிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சிறையில் உள்ள தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறைக் கைதிகளால் தொரப்பாடி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் கிளைச் சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டும். உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு) கார்த்திகேயன் (வேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி ஆட்சியர் விஷ்ணு பிரியா, சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago