தமிழகத்தில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள் தயாரிக்க மத்திய அரசு உதவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில், நேற்று (ஜூலை 20) நடைபெற்ற விவாதத்தில், வைகோ பேசியதாவது:
"நான் எடுத்த எடுப்பிலேயே, இந்தக் கொடிய கொள்ளை நோயைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கும், தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், யாரெல்லாம் உயிர் நீத்தார்களோ, அவர்களை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் கல்லூரியில் பொருளாதாரம் படித்தபோது, அந்தத் துறையின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவரான மால்தஸ் சொன்ன கொள்கை, இப்படியும் நடக்குமா? என்று என்னைத் திகைக்க வைத்தது.மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகும்; ஒரு பெரிய குண்டு வெடிப்பு ஏற்படுவது போல, ஏதோ ஒரு வழியில் இயற்கை மக்களைக் கொல்லும். அதை யாராலும் தடுக்க முடியாது. போர்க்களங்களும், கொடிய கொள்ளை நோய்களும்தான், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறுகின்றார்.
» இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
» என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: வேலைநிறுத்தம் பற்றி வரும் 23-ல் போராட்டக்குழு முடிவு
அதன்பிறகு நான் ஆராய்ந்து பார்த்ததில், மால்தஸ் சொன்னதுதான் உண்மை என்பதைப் புரிந்து கொண்டேன். கடந்த பல நூற்றாண்டுகளில், கோடானுகோடி மக்கள், கொள்ளை நோய்களால்தான் இறந்து போயிருக்கின்றனர்.
அதுபோல, இப்போது வந்திருக்கின்ற கோவிட் தொற்று, சீன நாட்டின் வுஹான் நகரில் இருந்து புறப்பட்டது என்று, ஆதாரங்களுடன் கூறுகின்றார்கள். அதே சீன நாட்டில், இன்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துவுக்கு முந்தைய 3,000 ஆண்டில், அமின் மங்கா என்ற பகுதியில் தோன்றிய கொள்ளை நோய், ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்தது. இதனை, சிர்லா என அழைத்தார்கள். இறந்தவர்களுடைய உடல்களை, ஒரே இடத்தில் போட்டு எரித்தார்கள். அதன்பிறகு, அந்தப் பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.
அடுத்து, கி.மு. 430 இல், ஏதென்ஸ் நகரில் ஏற்பட்ட கொள்ளை நோய், ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஒரு லட்சம் பேர் இறந்தார்கள்.
அடுத்து, கி.பி. 165 முதல் 180 வரை ரோமப் பேரரசில், ஆண்டோனைன் பிளேக் என்ற நோய் பரவிற்று. உயிர்களைச் சூறையாடியது. ஐம்பது லட்சம் பேர் இறந்தார்கள்.
கி.பி.250 இல், ரோமாபுரியில் மட்டும், சைபிரியான் பிளேக் நோயில், 5,000 பேர் இறந்தார்கள். நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, இறந்தவர்களின் உடல்கள் மீது, கெட்டியான சுண்ணாம்பைக் கொண்டு பூசினார்கள்.
அடுத்து, கி.மு. 541, 552 இல், பைசாண்டியப் பேரரசின் எல்லைக்கு உள்ளே, ஜஸ்டினியன் பிளேக் தொற்று பரவிற்று; 10 விழுக்காடு மக்கள் இறந்து போனார்கள்.
1,346 முதல் 1,353 வரை, கருப்பு மரணம், ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது; அந்தக் கண்டத்தின் மக்கள்தொகையில் சரிபாதிப்பேரைக் கொன்றது.
பின்னர், மெக்சிகோவிலும், மத்திய அமெரிக்க நாடுகளிலும், 1,545 முதல் 1,548 வரை, கோகோ லிஸ்ட்லி எனும் கொள்ளை நோய், ஒரு கோடியே 50 லட்சம் பேரைக் கொன்றது.
அடுத்து, 16 ஆம் நூற்றாண்டில், அமெரிக்க பிளேக் எனும் கொள்ளை நோய், மேற்கு அரைக்கோளப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுள் 90 விழுக்காட்டினரைக் கொன்றது.
1665-66 ஆம் ஆண்டுகளில், லண்டனில் பிளேக் நோய் பரவியது. சார்லஸ் மன்னன், மக்களை வெளியேற்றினான். மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் இறந்து போனார்கள்.
மார்செய்ல் பிளேக் தொற்று, 1720-23 ஆம் ஆண்டுகளில், ஒரு லட்சம் பேரைக் கொன்றது.
1770-72 ஆம் ஆண்டுகளில், ரஷ்யா பிளேக் தொற்றில், ஒரு லட்சம் பேர் இறந்தார்கள்.
1793 இல், ஃபிலடெல்ஃபியா மஞ்சள் காய்ச்சலில் 50,000 பேர் இறந்தார்கள்.
1889-90 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் ஃபுளூ கொள்ளை நோயில், 10 லட்சம் பேர் இறந்தார்கள்.
1916 இல், அமெரிக்காவில் போலியோ இளம்பிள்ளைவாதம் தாக்கியதில் ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். 1918-1920 ஆம் ஆண்டுகளில், ஸ்பானிஷ் ஃபுளூ காய்ச்சல், வட துருவத்தில் இருந்து உலகின் தென் கடல் பகுதிகள் வரை பரவியது. ஐந்து கோடி பேர் இறந்தார்கள்.
1957-58-களில், சீனாவில் இருந்து பரவிய, ஆசிய ஃபுளூ காய்ச்சலில், பத்து லட்சம் பேர் இறந்தார்கள்.
1981 முதல் இன்று வரை, எய்ட்ஸ் நோயால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள்.
2009-2010 ஆம் ஆண்டுகளில், கினி பன்றிக் காய்ச்சலில், இரண்டு லட்சம் பேர் இறந்தார்கள்.
2014-16 இல், மேற்கு ஆப்பிரிக்காவில், எபோலா கொள்ளை நோய் தாக்கி, 11,000 பேர் இறந்தார்கள்.
இப்பொழுது ஏற்பட்டுள்ள கொள்ளை நோயில், உலகம் முழுமையும் 40 லட்சம் பேர் இறந்துள்ளனர். இனி, மூன்றாவது அலை தாக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். அதை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான சடலங்கள் கங்கையில் மிதக்கின்ற காட்சிகள், பதற வைக்கின்றது. அடித்தட்டுத் தொழிலாளர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆக்சிஜன் ஆக்குவதற்கும், வெண்டிலேட்டர் கருவிகளும் செய்வதற்கு, மத்திய அரசு உதவிட வேண்டும். செங்கல்பட்டிலும், நீலகிரி மாவட்டம் குன்னூரிலும், அத்தகைய ஆய்வுக்கூடங்கள் இருப்பதை, திமுக உறுப்பினர் திருச்சி சிவா சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மருத்துவ வசதிகள், ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும்; தொழிலாளர்கள், குக்கிராமங்களில் வசிப்பவர்கள், நகரங்களில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு, ஆக்சிஜனும், உயர்தர மருத்துவமும் கிடைப்பதற்கு, அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில், நடுத்தரக் குடும்பத்தினர், ஏழைகள் கட்டணம் செலுத்த முடியவில்லை. அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்".
இவ்வாறு வைகோ பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago