நெடுஞ்சாலைத் துறையில் வெளிப்படையான இடமாற்றம்; லஞ்சம் வாங்கியது தெரிந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நெடுஞ்சாலைத் துறையில் எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமல் வெளிப்படையான அணுகுமுறையில் இடமாறுதல் வழங்கப்பட்டது. இடமாறுதலில் எவரேனும் தவறான வழியில் ஈடுபட்டு இருந்தது அரசின் கவனத்திற்கு வருமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று வெளியிட்ட அறிக்கை:

“பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருந்தால் நிர்வாக ரீதியாக அவர்களுக்குப் பணியிட மாறுதல் அளிப்பது எப்போதும் நடைமுறையில் உள்ளது. திமுக அரசு தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில் பலர் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவது அரசின் கவனத்திற்கு வந்தது. நான் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் முதலில் பொறியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் நடத்திப் பணி மாற்றத்திற்கு யாரும் கையூட்டு கொடுக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னேன். இந்தத் துறையில் 10 அலகுகள் உள்ளன. அவற்றில்தான் பல ஆண்டுகளாகப் பணிபுரிபவர்களை மாற்றம் செய்ய முடியும்.

பிற துறைகளில் உள்ள மாறுதல் நடைமுறையை நெடுஞ்சாலைத்துறையில் கடைப்பிடிக்க இயலாது. மேலும், கலந்தாலோசனை முறையில் மாறுதல் கடைப்பிடிக்கப்பட்டால் பணி மூப்பு அடிப்படையில் மூத்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அனைவரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மாறுதல் ஆணை பெற்று விடுவார்கள்.

இதன் விளைவாக மூத்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் இதர பணிகளுக்குப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். மேலும் 10 தலைமைப் பொறியாளர்கள் கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் ஆகிய அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இப்பொருள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் மாறுதல் வேண்டுபவர்கள் யாரிடமும் எவரிடமும் கையூட்டு கொடுத்தல் கூடாது என்றும் அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாறுதலுக்கு உரிய விண்ணப்பம் வரைவு செய்யப்பட்டு அதில் மாறுதலுக்கு மூன்று இடங்களைத் தெரிவிக்குமாறு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்படி மூன்று இடங்களைக் குறிப்பிட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமல் வெளிப்படையான அணுகுமுறையில் அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறையில் செய்யப்பட்ட மாறுதல் உத்தரவு அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாறுதல் தொடர்பாகச் செய்தி வெளியாகி உள்ளது. இதில் கடுகளவும் உண்மையில்லை. எவரேனும் தவறான வழியில் ஈடுபட்டு இருந்தால் அரசின் கவனத்திற்கு வருமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்