நாளை (ஜூலை 21) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, மு.தமிமுன் அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த தமது வாழ்க்கையில் இறை அச்சத்துடனும் அர்ப்பணிப்போடும் களப்பணி செய்து வெற்றி பெற்ற இறைத்தூதர்களின் வரிசையில் நபி இப்ராஹிமின் வாழ்க்கை உன்னதமானது.
இப்ராஹிம் நபி மற்றும் அவரின் புதல்வர் இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில்தான் தியாகத் திருநாள் என்னும் ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பக்ரீத் என்றும் இது அழைக்கப்படும்.
» தனியார் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நபி இப்ராஹிம் ஹாஜிரா இணையருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் கிடையாது. இப்ராஹிம் நபிக்கு 85 வயதானபோது இறைவன் இஸ்மாயில் எனும் ஆண் மகனை வழங்கினான். பிறகு இப்ராஹிம் நபியின் கனவில் தோன்றிய இறைவன் எனக்காக உன் மகனை பலியிடுக என கட்டளையிட இறைத்தூதரும் கட்டளையை நிறைவேற்ற மினா என்னும் இடத்துக்குச் செல்கிறார்.
இறைவன் மிகப் பெரியவன் என்று கூறி மகனை இறைவனுக்காக பலியிட முயற்சி செய்கிறார். சோதனையில் வெற்றி பெற்று மகன் இஸ்மாயிலை பலியிடும் தறுவாயில் மகனுக்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தார் நபி.
இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் ஆகிய இறைத்தூதர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக தான் உலகமெங்கும் இந்தப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தியாகத்தின் பெருமையை உலகுக்கு விளக்கும் உன்னதப் பெருநாள் தியாகத் திருநாள். உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மன ஓட்டத்தை அனைவரும் பெற்று வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தியாகத் திருநாளின் அடிப்படை நோக்கம். தியாகமும், தர்மமும் மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும். மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பும் அக்கறையும்தான் உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தழைத்தோங்க செய்யும்.
கடந்த ஆண்டு ரமலான் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள், இந்த ஆண்டு ரமலான் பெருநாள் ஆகியவற்றைப் பெருந்தொற்று காரணமாகப் பள்ளிவாசல்களில் கொண்டாட முடியாத நிலை விலகி, இவ்வாண்டு பள்ளிவாசலில் தியாகத் திருநாளைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கரோனா பெருந்தொற்று விலகிவிட்டது என்ற அலட்சிய மனநிலையில் இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இந்தப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்;
கரோனா பெருந்தொற்றின் இன்னல்கள் மறைந்து உலகெங்கும் அமைதி சமாதானம் மனிதநேயம் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றியும் கருணையும் உதவும் கொடை உள்ளமும் நம் மனங்களில் பெருகட்டும். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.
மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி
தியாகத்தை முன்னிறுத்தும் திருநாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்க 'ஈதுல் அல்ஹா' என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களை மனிதர்களே கொல்லும் நரபலியைத் தடுத்து, ஆடு, மாடு, ஒட்டகங்கள் எனப் பல்கிப் பெருகும் கால்நடைகளை இறைவனுக்காக அறுத்து பலியிட்டு, அதன் கறியை ஏழைகளுக்கு விநியோகிக்கும் முறையை, இறைத் தூதர்களில் ஒருவரான நபி இப்ராஹிம் (அலை) தொடங்கி வைத்தார்.
தனது தவப்புதல்வர் இஸ்மாயிலை (அலை), தான் கண்ட கனவின் படி, இறைவனுக்காக அறுத்து பலியிட அவர் துணிந்தபோது, இறைவனிடமிருந்து வந்த கட்டளை அதைத் தடுத்து நிறுத்தியது.
அவரது இறைப்பற்றை சிலாகித்து, அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு அந்த இறை கட்டளை அறிவுறுத்தியது. அந்த நிகழ்வே தியாகத் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் ஒரு மாபெரும் சமூக நல்லிணக்கமும் அடங்கியிருக்கிறது. இறைத்தூதர் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என, மூன்று பெரும் சமூகங்களால் போற்றப்படுபவர்.
அவர் மூலம் நிகழப் பெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவத்தை, இறைவனின் இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) தியாகத் திருநாளாகக் கொண்டாட அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படியே, உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை புனித மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் வாழ்வின் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளும் உன்னத நிகழ்வும் இத்திருநாளையொட்டியே நடைபெறுகிறது.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்திருநாள் கோலாகலமாகக் கொண்டாட முடியாத நிலையில், இவ்வாண்டு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடும் வாய்ப்பு உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் இத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தியாகங்கள்தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. கரோனா காலகட்டத்தில் தியாகப்பூர்வமாக பணியாற்றும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஓங்க அனைவரும் இத்திருநாளில் உறுதியேற்போம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
முகம்மது சேக் அன்சாரி, மாநிலத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்
மனித சமூகத்தின் விடுதலைக்கான ஒளியைக் கையில் ஏந்தியுள்ள முஸ்லிம்கள் மீண்டும் ஒரு தியாகப் பெருநாளைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளனர். கரோனா 2-வது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து உலகம் மீண்டு வரும் வேளையில் தியாகப் பெருநாளின் வருகை நம்பிக்கையாளர்களுக்கு ஆறுதலையும், குதூகலத்தையும் தந்துள்ளது.
இறைவனின் திருப்திக்காக தங்களையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின், அதாவது இப்ராஹிம் (அலை), ஹாஜரா (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகங்கள் ஹஜ்ஜிலும், தியாகப் பெருநாளின் சில கிரியைகள் மூலமும் நேரடியாக நினைவு கூரப்படுகின்றன.
ஓரிறை மீதான நம்பிக்கையின் பலத்தால் நம்ரூத்தின் அதிகார அழிச்சாட்டியங்களை எதிர்கொண்டவர். இறைவனின் உற்றத் தோழர், மக்களின் தலைவர், ஒரு உம்மத் என்றெல்லாம் குர்ஆன் அறிமுகப்படுத்தும் மாபெரும் ஆளுமைதான் இப்ராஹிம் (அலை). உலக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகம் நிறைவேற்ற வேண்டிய லட்சியப் பணியை ஏற்றுக்கொண்டு தனி மனிதராக நிறைவேற்றினார் இப்ராஹிம் (அலை).
தன்னுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற கவலையெல்லாம் அவர்களை ஆட்கொள்ளவில்லை. உற்ற தோழமையாக (கலீலுல்லாஹ்) அல்லாஹ் தன்னோடு இருக்கிறான் என்பது அவர்களின் பலம் மட்டுமல்ல, அனுபவமும், நிலைப்பாடுமாக இருந்தது. அந்த பலத்தின் பின்புலத்தில் வறண்டு போயிருந்த வரலாற்றில் நீரைப் பாய்ச்சினார்கள். அது பெரு வெள்ளமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவருடைய இறைவன் அவரிடம் 'சரணடையும்' என்று சொன்னபோது அவர், 'அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:131)
இப்ராஹிம் மட்டுமல்ல அவரது மனைவி ஹாஜரா (அலை) மற்றும் இளவல் இஸ்மாயில் (அலை) ஆகியோரும் லட்சியப் பணியில் பங்கேற்று மகத்தான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டார்கள்.
ஒரு ஆன்மிகவாதியாக வாழ்ந்து, உலக வாழ்க்கையைத் துறந்து அறிவுரைகளை மட்டுமே வழங்கி முடிந்துவிடவில்லை அவரின் வாழ்க்கை. தமக்குப் பின்னால் வரும் மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்க அந்த இறைத்தூதர் தியாகத்தின் அடிப்படையிலான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
போராட்டப் பாதையில் தனி ஒருவராகப் பயணிக்கவும் அவர் விரும்பவில்லை. தனக்குப் பின்னால் வரலாற்றை வாழ்ந்து காட்டுவது மூலம் எழுதும் தலைமுறைகள் உருவாக வேண்டும் என்று அவர் விரும்பினார். 'உங்களுடைய தந்தை இப்ராஹிமின் வழியைப் பின்பற்றுங்கள்' என்ற இறைவனின் கட்டளை என்பது தனி நபர், சமூகம் மற்றும் நாகரிக அமைப்பு முறையின் நிலைத்த வாழ்விற்கான வழியாகும். அது மரணத்துக்குப் பிந்தைய சுவன வாழ்வு வரை நீளம் கொண்டது.
'அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக!' (அல்குர்ஆன் 26:85) என்பது இப்ராஹிமின் (அலை) பிரார்த்தனையாக இருந்தது. நம்ரூதுகளும், ஃபிர்அவ்ன்களும் நாட்டை ஆளும்போது காரூன்கள் நாட்டின் வளங்களின் மீது ஏகபோக உரிமையைக் கொண்டாடுவார்கள். அப்போது இப்ராஹிமும், இஸ்மாயிலும். ஹாஜராவும் உயிர்த்தெழ வேண்டும் அதுதான் இறைவன் வகுத்த நியதி.
ஏகாதிபத்திய சக்திகளின் அழிச்சாட்டியங்கள் வரலாற்றில் நீண்ட காலம் நீடித்ததில்லை. அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது நம்பிக்கையாளர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த லட்சியம். இறுதி வெற்றிக்கான வாக்குறுதி இறைவனுக்கு வாழ்க்கையை கலப்பற்ற முறையில் அர்ப்பணித்த நம்பிக்கையாளர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. அதுதான் இப்ராஹிமின் வழி.
பெருந்தொற்றும், துயரங்களும் பீதி வயப்படுத்தும் காலத்தில் மக்களின் மெளனத்தைப் பயன்படுத்தி பாசிசம் நாட்டின் ஆன்மாவை மூச்சு திணறச் செய்கிறது. அப்பாவிகளைச் சிறையில் அடைக்கிறது. கொடூர சட்டங்களை இயற்றுகிறது. மக்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும், சூறையாடுகிறது.
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தான் விடிகிறது. ஆனால், இத்தகைய தீமைகளுக்கு எதிராக பொதுச் சமூகத்தில் ஆழ்ந்த மெளனம் நீடிக்கிறது.
இந்த மெளனத்தை உடைத்து தீய சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க இப்ராஹிமின் தியாகமும், ஹாஜராவின் விடா முயற்சியும், இஸ்மாயிலின் சமர்ப்பணமும் நமக்கு உத்வேகமளிக்கட்டும். நோய்வாய்ப்படாத உள்ளமும், விலைமதிக்க முடியாதவைகளை அல்லாஹ்வுக்கு சமர்ப்பணம் செய்வதுமே நமக்கு பலத்தைப் பெற்றுத்தரும்.
தியாகப் பெருநாளின் தொழுகையை நிறைவேற்றும் ஈத்காக்களிலிருந்து எழும் தக்பீர் தொனிகள் வெற்று முழக்கங்கள் அல்ல. அது நம்பிக்கையாளர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உயிர் மந்திரம். அது அக்கிரமக்காரர்களின் கோட்டைகளைச் சாய்த்த நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் ஏற்படுத்திய வார்த்தை.
இந்த மகிழ்வான தருணத்தில் தியாகத் திருநாளைக் கொண்டாடும் சமுதாய மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago