கல்விக் கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கல்விக் கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில், கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மந்த நிலையைக் காரணம் காட்டி, கல்விக் கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் தயங்குவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. கரோனா பாதிப்புகளால் பெற்றோர்களின் சராசரி வருமானம் குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும், தற்காலிகப் பின்னடைவைக் காரணம் காட்டி, குழந்தைகளின் கல்வி வாய்ப்பைப் பறிப்பது நியாயமற்றதாகும்.

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதற்கான முக்கியக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், தேவையானவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதும்தான்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரூ.94,000 கோடி கல்விக் கடனில், 21.50% அதாவது, ரூ.20,200 கோடி தமிழக மாணவர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடன்களைப் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகித்து வருகிறது.

ஆனால், கடந்த 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2020-21ஆம் ஆண்டில் தமிழகத்தில் வழங்கப்பட்ட கல்விக் கடனின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2019-20ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.2,420 கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் அது ரூ.1,478 கோடியாகக் குறைந்துவிட்டது. இது 39% வீழ்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டில் சுமார் 40 விழுக்காட்டினருக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால், நடப்பாண்டில் கல்விக் கடன் அளவு மேலும் குறையும். இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். அது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

கல்விக் கடன் வழங்குவது பெருமளவில் குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம் கரோனா பாதிப்பு காரணமாக பெரும்பான்மையான பெற்றோரின் ஊதியங்கள் குறைக்கப்பட்டதும், அதிக எண்ணிக்கையிலான பெற்றோர் வேலை இழந்ததும்தான். அதனால் கல்விக் கடன் பெறுவதற்காக வங்கிகள் நிர்ணயித்துள்ள ஆண்டு வருமான வரம்பைப் பெரும்பான்மையான பெற்றோர்களால் எட்ட முடியவில்லை.

இதைக் காரணம் காட்டி, பெரும்பான்மையான மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகள் மறுத்திருக்கின்றன. அதனால்தான் தமிழகத்தில் கல்விக் கடன் 39% வீழ்ச்சியடைந்திருக்கிறது.

வங்கி அதிகாரிகளின் நிலையிலிருந்து பார்த்தால், கல்விக் கடன் வழங்கத் தயங்குவதற்கு, நியாயம் என்று நம்பக்கூடிய காரணங்கள் பல உள்ளன. கல்விக் கடனைப் பொறுத்தவரை வாராக்கடனின் அளவு 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி வெறும் 15% ஆக இருந்தது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதியில் அது 16.50% ஆக அதிகரித்துவிட்டது.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், இத்தகையச் சூழலில் கல்விக் கடன் வழங்கினால், அதைத் திருப்பி வசூலிக்க முடியாதோ என்ற அச்சத்தில் கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. ஆனால், கரோனாவால் பல பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைந்திருப்பதும், பலர் வேலை இழந்திருப்பதும் தற்காலிகமானதுதான். கரோனா பாதிப்புகள் விலகி, இயல்பு நிலை திரும்பும் போது அனைத்தும் சரியாகி விடும்; கல்விக் கடன்கள் திரும்ப வசூலாகிவிடும்.

கரோனா பாதிப்பு காரணமாக 2019-20ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டுக்கும் கூடுதலாகப் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டிய இந்தியா, 4.2% வளர்ச்சியை மட்டுமே எட்டியது. 2020-21ஆம் ஆண்டில் மைனஸ் 7.3% என்ற அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 11.50% வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.40% முதல் 10.10% வரை வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக மீட்சிப் பாதையில் பயணிக்கும்போது ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்படும் என்று உறுதியாக நம்பலாம். இப்போது ஏற்பட்டுள்ள தற்காலிகப் பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது.

தமிழகத்தில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு விட்டன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அவற்றில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ, மாணவிகள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது வங்கிகள் வழங்கும் கல்விக் கடனைப் பொறுத்தே உள்ளது.

எனவே, வங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் கல்விக் கடன்களை வழங்க வேண்டும். வங்கிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளித்து, எந்த மாணவருக்கும் வருமானம் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி கல்விக் கடன் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்