அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், முகம் காட்ட விரும்பாத சிலரின் தூண்டுதலால் தங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக கட்சி விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்ற நிலையில், 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு உட்கட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், உட்கட்சித் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளதற்குத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூர்யமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சசிகலா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரர் சூரியமூர்த்தி இன்றைய தேதியில் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால் இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. வேறு சிலரின் தனிப்பட்ட நலனுக்காகக் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
முகத்தைக் காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குகின்றனர். ஏற்கெனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
மேலும், அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், எங்கள் நியமனத்தைக் கேள்வி கேட்க முடியாது.
2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சசிகலாவை நீக்கிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கரோனா சூழல் காரணமாக உட்கட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் வரை அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளார். அவர் உறுப்பினர்தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. ஒரே கோரிக்கைக்குப் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆகவே, நிர்வாகிகள் நியமனத்திற்குத் தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago