மேகதாது அணை விவகாரம்; ரைப்பேரியன் சட்டத்தால் தடுக்கலாம்: தமிழக அரசுக்கு நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர் யோசனை

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை ரைப்பேரியன் சட்டம் மூலம் தடுக்கலாம் என்று, தமிழக அரசுக்கு மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினரும் (Expert Member-Inter Linking of Rivers, Government of India), நீர்வழிச்சாலை திட்டத் தலைவருமான ஏ.சி.காமராஜ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று, கர்நாடகா அரசு திட்டவட்டமாகக் கூறிவருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டா மிகவும் பாதிக்கப்படும் என்று, அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து முறையிட்டனர். இந்த அணை விவகாரம் இரு மாநிலத்துக்கும் இடையேயான சுமுக நிலையை பாதித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினரும், மதுரையைச் சேர்ந்த நவீன நீர்வழிச்சாலை தலைவருமான ஏ.சி.காமராஜ் கூறியதாவது:

"எப்போதும் ஒரு ஆற்றில் வருகின்ற நீரில் அதன் கீழே உள்ள பகுதிகளுக்குத்தான் முதல் உரிமை என்று உலகளாவிய சட்டமான ரைப்பேரியன் ரைட் சொல்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகம் சம்மதித்தால்தான் கர்நாடக அரசு அங்கு அணை கட்ட முடியும். இல்லாவிட்டால், அணை கட்ட அவர்களுக்கு உரிமை கிடையாது. எனவே, ரைப்பேரியன் சட்டத்தை முன்னிறுத்தி, அதன்படி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி வழங்க வேண்டும். ஆனால், 2018ஆம் ஆண்டு கர்நாடக அரசு பெங்களூரு குடிநீர்த் தேவையைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கர்நாடகாவுக்கு 280.75 டிஎம்சி, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி (14.5 டிஎம்சி குறைவாக) வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த குறைக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டுப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் தொடங்க வேண்டுமென விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி நீரினை மாதாமாதம் கணக்கிட்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், இதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மாதந்தோறும் கணக்கிடும் முறையைக் கைவிட்டுவிட்டு, அன்றாடம் கணக்கிட்டு பங்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும்.

அதாவது, ஒவ்வொரு முறையும் காவிரிக்கு வரும் நீர், அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் தேக்கிவைக்கப்பட்டு, அவை நிரம்பிய பின்னரே தண்ணீர் வெளியேற்றப்பட்டு தமிழகத்துக்கு வருகிறது.

இவ்வாறு வருடம்தோறும் அல்லது மாதம் தோறும் தேக்கிவைத்துக் கொடுக்கும்பொழுது ஏதாவது காரணம் சொல்லி கர்நாடகா தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறது. பின் வெள்ளம் வரும்பொழுது திடீர் என்று தண்ணீர் திறந்து விடுகிறது. அந்த உபரி நீர் மேட்டூர் அணையின் கொள்ளளவைத் தாண்டும்போது அது நேரே கடலுக்குப் போய்விடுகிறது.

ஆனால், அன்றாடம் பகிரும் முறையில் காவிரியில் கிடைக்கின்ற நீரினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரும் என்ற விகிதத்தில் அன்றாடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களோடு ஏற்படும் இதுபோன்ற தண்ணீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் உடனே நதிநீர் இணைப்பைச் செயல்படுத்த வேண்டும்".

இவ்வாறு காமராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE