மதுரை அருகே கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு 

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி அருகே, வேளாம்பூரில் 1,000 ஆண்டுகள் பழமையான கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே, வேளாம்பூரில் பழமையான சிற்பம் பாதுகாப்பின்றி இருப்பதாக, கவசக்கோட்டை கிராம விவசாயி ராதாகிருஷ்ணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரனிடம் தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர்கள் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர், நேற்று (ஜூலை 18) வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புறம் முட்புதரில் கள ஆய்வு செய்தபோது, 1,000 ஆண்டுகள் பழமையான 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் உள்ளது எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது:

"ஊர் அழிந்து அரசாங்கப் பதிவேட்டில் மட்டுமே உள்ள கிராமம் வேளாம்பூர். இக்கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும், விரிந்த மார்புடனும் காணப்படுகின்றது.

தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் உள்ள பீடத்தின் மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படியும் ஒருகால் மீது மறுகாலை மடித்து அமர்தல்) யோக முத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக, ஒளி வீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும், சாமரத்துடன் உருவங்களும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

சமீபத்தில் கவசக்கோட்டை செங்கமேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஒப்பீட்டின்படி கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இப்பகுதியிலும் ஒரு சமணப் பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது.

இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் சிதறிக் கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப் பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக அனுமானிக்கலாம்".

இவ்வாறு முனீஸ்வரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE