மத்திய அரசின் கடைநிலை ஊழியர்கள் பணி 100% தமிழ்நாட்டவருக்கே; அதிகாரிகள் பணியில் 50% ஒதுக்குக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பிற துறைப் பணிகளாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை வெளிமாநிலத்தவர்களுக்குத்தான் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தெற்கு ரயில்வே துறையில் முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு ரயில்வே துறையின் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 12% பணிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களில் தமிழர்கள் தகுதியிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறை சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டு எல்லையில் பெரும் பகுதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களில் 75% இடங்களை நேரடியாகவும், 25% இடங்களை ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியர்களைக் கொண்டும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே பணியில் உள்ள சி பிரிவு ஊழியர்களுக்கு 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்குப் போட்டித் தேர்வு, தட்டச்சுக்கான தொழில்நுட்பத் தேர்வு ஆகியவை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்தப் பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 12% இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 88% இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர்.

அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தெற்கு ரயில்வே துறையின் செயல்பாட்டு எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கூட, பெரும்பான்மையானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டுக்கான ரயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே துறை பணிகள் தமிழர்களைத் தவிர வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதேபோல் நடந்துள்ளது. துறை சார்ந்த பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளாக இருந்தாலும், நேரடித் தேர்வுகளாக இருந்தாலும் பெரும்பாலான பணிகள் பிற மாநிலத்தவர்களுக்குத்தான் கிடைக்கின்றன.

ரயில்வே துறை பணிகள் மட்டும்தான் என்றில்லை. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பிற துறைப் பணிகளாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை வெளிமாநிலத்தவர்களுக்குத்தான் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திறமையில்லாதவர்கள் அல்ல. ஆனாலும், தமிழ்மொழித் திறன் சார்ந்த தேர்வுகளில் கூட தமிழ்நாட்டின் மாணவர்களை விட ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால் அதை மர்மம் என்றுதான் கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து கைப்பற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தமிழக அரசும், மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமாக இருந்தாலும், அங்குள்ள மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவங்களின் கட்டமைப்புகள் மத்திய அரசால் மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, அவற்றை உருவாக்க நிலம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாநில அரசுகளும் பங்களித்துள்ளன.

அத்தகைய பங்களிப்புகளைச் செய்தும் சம்பந்தப்பட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றால் அதைவிட மோசமான சமூக நீதி இருக்க முடியாது. அத்தகைய சமூக அநீதியை உடனடியாகப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவதுதான் அதற்குச் சரியான தீர்வாகும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகள் முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50% இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மத்திய அரசின் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதைத் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்