தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் அதிநவீன ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் 'ஐஎன்எஸ் சிந்துஷாஸ்ட்ரா' வந்துள்ளது.
இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையை ஒட்டிய தென்னிந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்துள்ளதாகவும், 10 நாட்கள் இக்கப்பல் தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இலங்கையில் சீன ஆதிக்கம்:
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இலங்கையில் உள்ள சில துறைமுகங்களை சீனா குத்தகைக்கு எடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
» தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்
மேலும், இந்தியாவை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் சீனா தனது போர்க்கப்பல்களையும் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாக வருகின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் தொழிற்சாலை, கனநீர் ஆலை, துறைமுகம், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தகவல் மையம் போன்ற முக்கிய கேந்திரங்கள் தென் தமிழக பகுதியில் அமைந்துள்ளன. மேலும், குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கபடவுள்ளது.
பாதுகாப்ப்பு பணிகள்:
இந்த நிலையில் நாட்டின் தென்கோடி மூலையில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அண்மைக்காலமாக இந்திய அரசு தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் விமானப் படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான விமான தளங்கள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் புதிதாக நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. தேவைப்பட்டால் ராணுவ விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்:
இந்த நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் சிந்துஷாஸ்ட்ரா' என அதிநவீன ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பல் வந்துள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் துறைமுகத்தில் இந்திய கடற்படைக்கு என ஒதுக்கப்பட்ட தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் மற்றும் எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் 10 நாட்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. எனவே, இதனை பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 'ஐஎன்எஸ் சிந்துஷாஸ்ட்ரா' இந்திய கடற்படையில் உள்ள அதிநவீன ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலாகும். கடந்த 2000-வது ஆண்டு ஜூலை 19-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பலில் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 52 கடற்படை வீரர்கள் உள்ளனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் உள்ள சிந்துகோஷ் வகையை சேர்ந்த 10-வது கப்பலாகும். இந்த நீர்மூழ்கி கப்பலில் 300 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று தரை, வான் மற்றும் கடல் இலக்கை தாக்கும் அதிநவீன குரூஸ் ஏவுணைகள் மற்றும் கையால் தூக்கி செல்லும் அளவிலான சிறிய ஏவுணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன.
இலங்கையை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கப்பல் வருகை தொடர்பாக கடற்படை தரப்பிலோ அல்லது துறைமுக தரப்பிலோ எந்தவித அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago