குற்றவாளிகளுடன் போலீஸார் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நமச்சிவாயம் முதன்முறையாக காவல்துறை தலைமையகத்துக்கு இன்று (ஜூலை 15) சென்றார். அவரை போலீஸ் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்த சட்டம்- ஒழுங்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் டிஜிபி, ஏடிஜிபி சீனியர் எஸ்.பி.க்கள் பிரதிக்ஷா கொடாரா, ராகுல் அல்வால், மகேஷ்குமார் பர்ன்வால் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
3 மணி நேரத்துக்கு மேலாக நடந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
‘‘புதுச்சேரியில் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உள்துறை அமைச்சர் என்ற தனிப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், காவலர்கள் நலம், இடமாற்றம், பதவி உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு மாநிலம் முழுவதும் மக்கள் நிம்மதியாக, அமைதியான முறையில் வாழ்வதை உறுதி செய்வோம். சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் சக்திகள் மீது உறுதியான நடவடிக்கையினை மேற்கொண்டு அமைதியை நிலைநாட்டுவோம்.
புதுச்சேரியின் முக்கிய இடங்கள் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். நாட்டு வெடிகுண்டு பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை விரைவாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இரவு ரோந்துப் பணியை முடுக்கிவிடுவதோடு, கிராமப்புறங்களில் சிறப்பு அதிரடிப் படையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து இலக்கு வைத்து பொதுமக்களிடம் காவல்துறையினர் அபராதம் போடவில்லை. விதிகளை மீறுவோர், முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீதுதான் அபராதம் விதிக்கப்படுகிறது.
மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடைப்பட்டுப் போன காவலர் தேர்வு உடனே நடத்தப்படும். வயது வரம்பினைத் தளர்த்தவும் கோரிக்கை வந்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரிதிருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேரக் கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.
காவல்துறையினர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால், எவ்வளவு? பெரிய உயர் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் மீது 100 சதவீதம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.’’
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago