நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

By செய்திப்பிரிவு

“முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்தவிடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு, இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் அதிமுக அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.

நான், கடந்த மாதம் தமிழக சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரையின் மீது பேசும்போது கூட, நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டப்பேரவையில் முதல்வர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை. நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தனர்.

நம் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை பல்வேறு திருப்பங்களை தமிழக மாணவர்கள் சந்தித்துள்ளனர். தற்போதைய தமிழகத்தை ஆளும் திமுக, அன்று அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், மத்திய அரசிதழ் நாள் 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து அறிவித்தது. அப்போது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் இணை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.

2011-ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் 2016 வரை, முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றார். உச்சநீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில் நீட் தேர்வின் மூலம் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது.

எனது தலைமையிலான அதிமுக அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 31.1.2017 அன்று சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் வரும் வரை 85 விழுக்காடு தமிழகப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும், 15 விழுக்காடு மத்திய வாரியங்களில் படித்த மாணவர்களுக்கும் என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணை 14.07.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரித்து உத்தரவிடப்பட்டது. மேலும், 2017-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, மறுசீராய்வு மனுவை ((Curative Petition)) தாக்கல் செய்து, நீதித் துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தில் அதை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு நீதிபதிகள் குழுவை நியமிக்கச் செய்து, ஜெயலலிதா பெற்ற ஆணையை ரத்து செய்தது இன்றைய முதல்வரின் கூட்டாளிகள் தான் என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை.

எந்தச் சூழ்நிலையிலும், யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று கொக்கரித்ததும் அந்த கூட்டாளிகள் தான். கோவிட் 2019-ஐ தொடர்ந்து, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வினை 2020-2021ஆம் கல்வியாண்டிற்கு ரத்து செய்து, பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேர்க்கையினை கொண்டு வரும்வகையில், மருத்துவக் கழக சட்டம் 1956 மற்றும் பல் மருத்துவ சட்டம் 1948 மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஒரு அவசரச் சட்டத்தினை உருவாக்கித் தரவேண்டி, பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு எனது தலைமையிலான அதிமுக அரசு 8.7.2020 அன்று கடிதம் அனுப்பியது.

மேலும், 25.8.2020 அன்று நடைபெற்ற மாநில சுகாதாரச் செயலாளர்கள் அளவிலான காணொளி கூட்டத்தின் போதும், மேற்கூறிய தமிழக அரசின் நிலைப்பாடு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டும், தமிழ் நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கேட்டும் மத்திய அரசிடம் அம்மாவின் அரசு கடுமையாகப் போராடியது.

தற்போதைய திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய அமைத்த குழு, உச்சநீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த திமுக அரசு, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும் என்றும், இந்த குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும்/ பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

மேலும், இது அரசின் கொள்கை முடிவு, இதற்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், இந்தக் குழு அமைக்கப்பட்டதால் இந்த மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த 14 பக்க தீர்ப்பில், இந்த அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள வாசகங்களை அப்படியே குறிப்பிட்டு, குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கு எதிரான இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளது.

இதைத் தவிர, இந்த குழு நீட் தேர்வினை ரத்து செய்ய அமைக்கப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் திமுக அரசு குறிப்பிடவில்லை.

உயர்நீதிமன்றம் நேற்று, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ இன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய ஸ்டாலின் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி சுமத்தியுள்ளார்.

எங்களைப் பார்த்து "பாதம் தாங்கிகள் " எதிர்கட்சியான பிறகும் பி.ஜே.பி-யின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, தான் வகிக்கும் முதல்வர் பதவிக்கான தகுதியை உணராமல், அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கி இருக்கிறார். 1999-2004 காலக்கட்டத்தில் மத்திய பாஜக அரசில் பங்குகொண்டு, 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து, 2001-ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பிஜேபி-க்கு 26 இடங்களை அள்ளி வழங்கி குலாவிய போதும், இவர்கள் எதைத் தாங்கிக்கொண்டிருந்தார்கள் என்று திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது.
ஆனால், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள், அநாகரீகமாக நடந்துகொள்ள மாட்டோம். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். என்ற வள்ளுவர் வாக்கின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்த நாங்கள் நீட் தேர்வு முதல், தமிழகத்தை பாதிக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும், எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம்.

இன்றைய திமுக ஆட்சியாளர்களைப் போல், எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அள்ளி வீசலாம், மக்களை ஏமாற்றலாம், அதிகாரம் கைக்கு வந்தபின் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம், ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை யாரும், எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற மமதை குணம் கொண்டுள்ளது போல் நாங்கள் செயல்படுவதில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் நீட் தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்வது, நீட் தேர்வுக்குப் பின்னரும் மருத்துவரான பின்பும் அவர்களுக்கு கை கொடுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுவரை நடந்த எந்தவொரு நீட் தேர்விலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டதே தவிர, ஐந்து ஆண்டு மருத்துவப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கபட்டதாகத் தெரியவில்லை. இப்போதும், இந்த திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எந்தவிதமான, முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தேர்தலுக்காக வாய் ஜாலம் காட்டிவிட்டோமே என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று அறிவிலிகள் அரற்றுவது போல் பிதற்றிக்கொண்டு, நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த அம்மாவின் அரசை தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அதிமுக அரசு, பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது. 2019-ல் மருத்துவம் பயில அரசுப் பள்ளிகளில் பயின்ற வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இந்த நிலையை மாற்றிட வேண்டும் என நான் உறுதி கொண்டேன்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, பொதுமக்களோ, வேறு யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினேன்.

இதன் மூலம் 2020-ம் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படித்த 435 மாணாக்கர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு உண்டான மருத்துவக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் நான் ஆணையிட்டிருந்தேன்.

நீட் தேர்வை அம்மாவின் அரசு கடுமையாக எதிர்த்த போதும், அது இருக்கும் வரை, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களை அத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றி அமைத்ததோடு, மாவட்டந்தோறும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்போது 1945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன. அதிமுக ஆட்சியில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை அதிகப்படுத்தியதன் மூலம், சுமார் 5,400 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியதும் எங்கள் அரசுதான்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழிவந்த நாங்களும் நீதிக்குத் தலைவணங்கக் கூடியவர்கள்; சட்டத்தை மதிப்பவர்கள்; எத்தகைய சூழ்நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர்கள்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் நலனுக்காக நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தவரை நீதியை நம்பி, தலை முதல்பாதம் வரை போராடியவர்கள். இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு எடப்பாடி மு. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்