புதிய ஐடி விதிகளை எதிர்த்து வழக்குகள்; நாங்கள் விசாரிப்போம்; நீங்கள் பதில் அளியுங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐக் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்தது.

இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன், பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்யத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இது தன்னிச்சையானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அங்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய அரசுத்.தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால், இங்கு தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்