மகாமகத் திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று காலை முதல் இரவு வரை கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆறு ஆகிய இடங்களில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் புண்ணிய தலங்களில் நீராடினால் தீரும். அந்தப் புண்ணிய தலங்களில் செய்த பாவங்கள் காசியில், கங்கையில் நீராடினால் தீரும். காசியில் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் நீராடினால் தீரும். கும்பகோணத்தில் உள்ளவர்கள் செய்த பாவங்கள், கும்பகோணத்தில் புனித நீராடினால் தீரும் என்று பவிஷோத்திர புராணம் தெரிவிக்கிறது.
இத்தகைய பெருமை பெற்ற கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடுவது வழக்கம். மகாமகப் பெருவிழா தொடங்கிய 13-ம் தேதி முதல் கும்பகோணத்தில் உள்ள புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடிச் சென்றவண்ணம் உள்ளனர். மகாமகப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களிலும், சக்கரபாணி உள்ளிட்ட 5 வைணவ கோயில்களிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். குறிப்பாக, மகாமகக் குளத்துக்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயில்களில் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. மாலையில் ஓலைச்சப்பரங்களில் வீதியுலா நடைபெற்றது. இதேபோல வைணவத் தலங்களில் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஓலைச்சப்பர கருட வாகனங் களிலும் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை முதல் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறை, பகவத் படித்துறை, டபீர் படித்துறை ஆகிய இடங்களில் திராளான பக்தர்கள் புனித நீராடினர்.
மகாமகக் குளத்தில் நீராடிய தும், அங்கிருந்து பொற்றாமரைக் குளத்துக்கும், காவிரி ஆற்றுக்கும் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ள தால் சாலைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருந்தது.
1.70 லட்சம் பக்தர்கள்...
மகாமகம் தொடங்கிய நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் நீராடி உள்ளனர்.
விழா துளிகள்...
இருசக்கர வாகனத்தில் வலம் வரும் ஐ.ஜி.
மகாமகப் பெருவிழாவுக்காக கடந்த ஒரு வாரமாக மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் கும்பகோணத்தில் முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். கும்பகோணத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 4 சக்கர வாகனத்தில் செல்வது சிரமமாக உள்ளதை கருத்தில்கொண்ட ஐ.ஜி, தனது இருசக்கர வாகனத்தில் மகாமகக் குளத்தின் 4 கரைகள் மற்றும் நகரில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ரோந்து சென்று போலீஸாருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
பூ வியாபாரிகளின் சாலை மறியல்
ஆதிகும்பேஸ்வரர் கோயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. தேரோட்டம் நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அந்த கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கும்பேஸ்வரர் மேலவீதியில் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் கண்காணிப்பு பொறுப்பு வகிக்கும் உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணக்குமார், ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளதாகக் கருதி, அந்த கடைகளை நகராட்சி குப்பை லாரிகளில் ஏற்ற உத்தரவிட்டார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நகராட்சி லாரியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
புத்தகக் கண்காட்சி இல்லாததால்…
முன்பெல்லாம் மகாமகத் திருவிழாவின்போது, 10 நாட்களும் கும்பகோணத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும். பிரபல எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் தன்னுடைய நூல்களில், “நான் மகாமகப் பெருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் புதிய புதிய ஆன்மிக நூல்களை வாங்கி வந்து படித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மகாமகத்தையொட்டி மக்கள் அதிகம் கூடும் கும்பகோணத்தில் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கலாம், ஆனால், புத்தகக் கண்காட்சி இந்த முறை இல்லை என்பது இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் குறையாக உள்ளது.
விளம்பர பலகையில் மின்கசிவால் தீ
மகாமகக் குளத்தின் மேல்கரையில் நகராட்சி விடுதி வாயிலில் மகாமகம் தொடர்பான செய்திகள், கோயில்கள் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக எல்இடி விளம்பர பலகை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மின்கசிவால் இந்த எல்இடி விளம்பர பலகையில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக மின் இணைப்பை நிறுத்தி தீ தடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மகாமகக் கோயில்களில் இன்று…
மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: வெள்ளிப் பல்லக்கு, காலை 8, சுவாமி அம்பாள் கைலாச வாகனத்தில் ஏகாசனத்தில் புறப்பாடு, இரவு 7.
சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: பல்லக்கு, காலை 8, இந்திர விமானத்தில் வீதியுலா, இரவு 7.
ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்: பல்லக்கு, காலை 8, நந்தி வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா, மாலை 6.
பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: யானை வாகனம், சிம்ம வாகனத்தில் வீதியுலா, இரவு 7.
விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: பல்லக்கு, காலை 8, அதிகார நந்தி காமதேனு, இரவு 7.
ராஜகோபால சுவாமி கோயில்: வெள்ளிப் பல்லக்கு, காலை 8, ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.
சக்கரபாணி சுவாமி கோயில்: பல்லக்கு, காலை 8, ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா, இரவு 7.
சாரங்கபாணி கோயில்: மகாமகப் பெருவிழா, வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு, காலை 8, வெள்ளி ஹனுமந்த வாகனம் இரவு 7.
ராம சுவாமி கோயில்: பல்லக்கு, காலை 9, ஹனுமந்த வாகனம், இரவு 7.
அம்மா உணவகத்தில் 5,000 இட்லி
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் காலையில் 1,000 இட்லியும், மதியம் 300 கலவை சாதமும் விற்பனை செய்யப்படுகிறது. மகாமகத்தையொட்டி வரும் 22- தேதி வரை 5 ஆயிரம் இட்லியும், 3 ஆயிரம் கலவை சாதமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
ஏசி பஸ் நிறுத்தம் கூடாரமானது
கும்பகோணத்துக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இரவில் பயணம் செய்து இங்கு வருவோர் காலையில் நீராடிவிட்டு, கோயிலில் தரிசனம் செய்த பின்னர் உடைகளை மாற்றிக்கொண்டு ஓய்வெடுக்க இடம் இல்லாததால், சாலையோரம் உள்ள ஏசி பேருந்து நிறுத்தங்களில் ஓய்வெடுத்தனர். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் மகாமகக் குளத்தில் நீராடிவிட்டு தலைமை அஞ்சல் நிலையம் சாலையில் உள்ள ஏசி பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை குட்டித் தூக்கம் போட்டுவிட்டு பின்னர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
ரயில்வே விழிப்புணர்வு
திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு சார்பில், மகாமகத்தையொட்டி, கும்பகோணத்துக்கு ரயில் வந்து இறங்கும் பயணிகளுக்கும், மகாமகம் குளக்கரையிலும் “உங்கள் கவனத்திற்கு...” வழிப் பயணம் தானே, சற்றே நின்று செல்லலாமே..., நமது வாழ்க்கைப் பயணம் நின்று போகலாமா? என்ற தலைப்புகளுடன் ரயில் பாதை, ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விரிவான தகவல்கள், படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரம் வழங்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago