தமிழகத்தில் 7,53,280 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திடும் முகாமை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஜூலை 12) தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல நோக்கம் நிறைவேறி இருப்பதால், தமிழகத்தில் இதுவரை 1,62,61,985 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 7,53,280 தடுப்பூசிகள் உள்ளன.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதத்துக்குரிய தொகுப்பினை விரைந்து பெறுவதற்கு சுகாதாரத் துறையின் செயலாளரை டெல்லிக்கு அனுப்பி இரண்டு நாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, மத்திய அரசின் சுகாதாரத் துறை அலுவலர்களைச் சந்தித்து வலியுறுத்தியதால், தமிழகத்துக்குத் தடுப்பூசிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குத் தொழில் நிமித்தமாக நரிக்குறவர்கள் சென்றுவருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுத்திட வேண்டுமென்று நகர்ப்புற சுகாதாரத்துறை அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தியதன் அடிப்படையில், அவரது முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து தடுப்பூசி முகாம் இப்பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நானும், சுகாதாரத் துறையின் செயலாளரும் 33 மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வை நடத்தியிருக்கிறோம். மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய டயாலிசிஸ், கார்டியோலாஜி போன்ற பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளோம். கரோனா நோயைத் தாண்டி பிற நோய்களுக்கும் சிறப்பான கிசிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகப் படுத்திருந்து புண் வந்து பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உரிய தீவிர சிகிச்சைகள் அளிக்க இதன் பிறகு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்துவோம். நேற்றைக்குதான் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓர் ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை இத்துறை சம்பந்தப்பட்ட மருத்துவத் தோழியரிடமிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வின்போது வரப்பெற்றுள்ளோம்.
அங்கு மருத்துவக் கல்லூரி இயக்குநர், பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் ஆகியோரிடமும் அரசு மருத்துவமனையோடு சேர்ந்து இயங்குவதற்கான அவரது விருப்பத்தினைத் தெரிவித்தார். உடனடியாக அம்மையம் தொடங்குவதற்கான ஆணையை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்று அந்தத் தோழியரின் வீட்டுக்கே சென்று அளித்திருக்கிறார். மருத்துவம் சார்ந்த பணிகள் தடைபெற்று நின்றுவிடக் கூடாது என்பதற்காக பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு 18 வகையான பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தால் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கப்படும்.
கரும்பூஞ்சை நோயினால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 3,929 பேர். இக்கரும்பூஞ்சை நோயினால் 122 பேர் இறந்துள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கரும்பூஞ்சைக்கென பிரத்யேக வார்டுகள் திறக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 500 படுக்கைகளும், மதுரையில் 500 படுக்கைகளும் அடங்கும். இந்நோய் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தெரிந்த உடனேயே சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளை நாடினால் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்று இல்லம் திரும்புகின்றனர். இந்நோய்க்கான ஆம்போடெரிசின், பொசகொனோசோல் போன்ற மருந்துகள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையென இணையதளம் மூலம் தொடர்புகொண்டால் அவர்களுக்குத் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago