காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"நாம் அனைவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
தமிழகத்துக்குக் காவிரி என்பது வாழ்வுரிமையாகும். அது எந்த அளவு உண்மையோ, அந்த அளவுக்குக் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை. இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன். காவிரி விவகாரத்தில் தமிழகமும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையோடு இருக்கின்றன என்பதை நாம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உணர்த்தியாக வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம்!
» ரூ.1330 கோடி மின்வாரிய நிலக்கரி டெண்டர் திரும்பப் பெறப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
காவிரியின் உரிமைக்காக நாம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். குறிப்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் ஆற்றிய பணிகள் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டியுள்ளன.
காவிரியில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியவரும் கருணாநிதிதான். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி 'காவிரி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு 5.9.1969-ல் கடிதம் எழுதியவர்.
நடுவர் மன்றம் அமைக்க முதன்முதலில் 17.2.1970-ல் கோரிக்கை விடுத்தவர். 2.6.1990 அன்று நடுவர் மன்றம் அமையக் காரணமாக இருந்தவர். 20.7.1990-ல் அதன் முதல் விசாரணை நடைபெற்றது. அந்த நடுவர் மன்றத்திற்கு 'இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு' என்ற உத்தரவினை உச்ச நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக் கொடுத்தவர் தலைவர் கருணாநிதி.
இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 11.8.1998 அன்று வரைவுத் திட்டம் உருவாக்கி, அதற்குப் பிரதமர் வாஜ்பாய் தலைமையில், முதல்வர்கள் இடம்பெற்ற காவிரி நதிநீர் வாரியம் அமையப் பாடுபட்டவர். காவிரி நடுவர் மன்ற விசாரணையை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து 5.2.2007 அன்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைப் பெற்றதும் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான்.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 'காவிரி உரிமை மீட்புப் பயணம்' மேற்கொண்டு, இப்போது நம்மிடம் உள்ள காவிரி வரைவுத் திட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது அடியேன் என்பதை இங்கு அமர்ந்திருப்பவர்கள் அறிவீர்கள். இவை இதுவரை நடந்தவை.
இன்று மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது மேகதாது அணை.
காவிரியின் குறுக்கே நமது மாநில எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது அணையைக் கட்ட, கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதனை நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்துத் தடுத்தாக வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால், நமது விவசாயிகளின் நலன் மோசமான நிலைமையை அடையும். இந்த அணை கட்டப்படுவதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடகம் சொல்லி வருகிறது. இதில் துளியளவும் உண்மை இல்லை. தமிழகம் முழுமையாக பாதிக்கப்படும்.
இப்போது அவர்கள் அணை கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது என்ற இடத்துக்கு சிறிது முன்னர் அர்காவதி நதி வந்து காவிரியில் இணைகிறது.
இப்படி இணைந்த பிறகு காவிரி நதியானது மேகதாதுவில் கடிமான பாறைப் பகுதியில் குறுகிய பள்ளம் வழியாக சுமார் 10 மீட்டர் அகலத்தோடு பாய்கிறது. இந்த இடத்தில்தான் அணை கட்ட முயல்கிறார்கள். இதனைக் கட்டினால், தமிழகத்துக்கு வரவேண்டிய நீர்வரத்து குறையும். அதனால்தான் கட்டக் கூடாது என்கிறோம்.
வழக்கமான காலத்திலேயே நமக்குத் தரவேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்குவது இல்லை. இப்படி ஒரு அணையையும் கட்டிவிட்டால், எப்படித் தண்ணீர் வரும் என்பதுதான் நம்முடைய கேள்வி! வெள்ளக் காலங்களில் அந்த நீரைத் தேக்கி வைக்காத சூழலில், உபரி நீரைத்தான் தமிழகத்துக்குக் கர்நாடகம் தருகிறது. காவிரி நடுவர் மன்ற உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகிய ஒதுக்கீடுகளின்படி சொல்லப்பட்ட நீரையும் கர்நாடகம் வழங்குவது இல்லை.
இந்தச் சூழலில், காவிரியின் குறுக்கே 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட, மேலும் ஒரு அணை கர்நாடக அரசால் அமைக்கப்பட்டால் நமது விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அபாயம், தற்போது நம்மை எதிர்நோக்கியுள்ளது. அதனால்தான் இந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளோம். பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவைக்காகவும் மின் உற்பத்திக்காகவும் இந்த அணையைக் கட்டுவதாகக் கர்நாடகம் சொல்வது உண்மையல்ல. அது நம்மை ஏமாற்றுவதற்காகச் சொல்வது.
காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது. கர்நாடகாவைவிடத் தமிழகத்தில்தான் அதிகமான நீளத்துக்குக் காவிரி பாய்கிறது. எனவே, முழு உரிமை நமக்கு இருக்கிறது. இந்த உரிமையைச் சட்டபூர்வமாகவும் நாம் நிலைநாட்டியுள்ளோம்.
காவிரி நீர்ப் பிரச்சினையின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவில் மூன்று கூறுகள் உள்ளன. அதாவது,
1. கபினி அணைக்குக் கீழிருக்கும் பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழ் இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்தும், சிம்ஷா, அர்காவதி மற்றும் சொர்ணாவதி நதிகளின் உப வடிநிலங்கள் மற்றும் சிறு நதிகளிலிருந்தும் பாயும் நீர்;
2. கபினி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர்;
3. கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர்;
ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கக்கூடிய நீரைக்கொண்டு தமிழகத்துக்கான பங்கு, நிறைவு செய்யப்படவேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரையறுத்துள்ளது. இந்த மூன்று கூறுகளில் கடைசி இரண்டும் கர்நாடக அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்த பின்னரே நமக்கு நீர் கிடைக்கின்றது. ஆனால், முதல் உத்தரவைப் பொறுத்தவரை எந்தவிதமான அணையும் இல்லாத காரணத்தால் இந்தப் பகுதியில் கிடைக்கும் நீர் எந்த இடையூறும் இன்றி நமக்குத் தற்போது கிடைத்து வருகிறது. இதில் தடைபோடும் சதிதான் மேகதாது அணை கட்டும் திட்டம் ஆகும்.
மேகதாதுவில் அணை அமைக்கப்பட்டால் இவ்வாறு நமக்குக் கிடைத்துவரும் நீர் அனைத்தும் இந்தப் புதிய அணையில் தேக்கி வைக்கப்பட்டுக் கர்நாடக மாநிலம் பயன்படுத்தியது போக எஞ்சிய நீர் மட்டுமே நமக்கு வழங்கப்படும் நிலைதான் உண்மையாக ஏற்படும்.
இதைக் கருத்தில்கொண்டுதான் பல ஆண்டுகளாக இந்த இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக நாம் பல போராட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
• 1998-ம் ஆண்டு மத்திய அரசின் என்.ஹெச்.பி.சி. நிறுவனம் இங்கு நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்தபோது தமிழக அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. அதனால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
• சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்தை 2008-ம் ஆண்டில் கர்நாடக அரசு சொந்தமாகச் செயல்படுத்த முடிவு செய்ததையடுத்து, 2008-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாளன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
• 2014-ம் ஆண்டு மேகதாது அணைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்காகக் கர்நாடக அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியபோது, இந்த ஒப்பந்தப் புள்ளியைக் கர்நாடக அரசு திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தவும், காவிரி நடுவர் மன்றத்தால் கருதப்பப்படாத எந்தப் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுவதைத் தடுக்கவும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாத நிலையில் கர்நாடக அரசு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்தவும் கோரி, இடைக்கால மனு ஒன்றைத் தமிழக அரசு 2014-ம் ஆண்டு தாக்கல் செய்தது.
• அடுத்து, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இதுபோன்ற திட்டங்களைத் தடுப்பதற்காகவும் தமிழக சட்டப்பேரவை 05-12-2014 அன்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் 12-12-2014 அன்று பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
• 27-03-2015 அன்று, மேகதாதுவில் ஒரு புதிய அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதைத் தடுக்க உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை தீர்மானம் இயற்றியது. தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் அடங்கிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் 28-03-2015 அன்று பிரதமரைச் சந்தித்துத் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களை அளித்து, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினர்.
• 16-02-2018 அன்று காவிரி நதிநீர் வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மேற்கண்ட தீர்ப்புக்கு முரணாக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்தின் திட்ட மதிப்பீட்டுக் குழுமத்தின் ஒப்புதலுக்காக 04.08.2018 அன்று சமர்ப்பித்தது. இதனை எதிர்த்து, முதல்வர் பிரதமருக்கு 04.09.2018 அன்று கடிதம் எழுதினார். இந்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசின் நீர்வளக் குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநரகம், 22-11-2018 அன்று விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, கர்நாடக அரசின் காவிரி நீரவாரி நிகம நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
• இதையடுத்து, இந்த அனுமதிக்குத் தடை விதிக்குமாறும், காவிரி நீரவாரி நிகம நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், காவிரிப் படுகையில் தற்போதுள்ள நிலையே இம்மனு இறுதியாகும்வரை தொடரவும் ஆணை வழங்கிடக் கேட்டுக்கொண்டும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
• இந்நிலையில், 6-12-2018 அன்று, இப்பிரச்சினை குறித்து கர்நாடகாவுக்குத் திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற, ஒன்றிய நீர்வளக் குழுமத்திற்கு அறிவுறுத்துமாறு ஒன்றிய நீர்வள அமைச்சகத்தினை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
• இந்தத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஒப்புதல்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் காவிரி நீரவாரி நிகம நிறுவனம் கோரியபோதும், தமிழக அரசு இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
• இத்திட்டத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக்கொண்டபோது, தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாக, அடுத்தடுத்து நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் இந்த அணை பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு 20 ஆண்டுகளாகப் பல்வேறு நிலைகளில் பல்வேறு எதிர்ப்புகளையும், சட்டப் போராட்டங்களையும் இந்தத் திட்டத்துக்கு எதிராக நாம் மேற்கொண்டு வந்துள்ளோம். இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு 17.6.2021 அன்று பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தின் பல முக்கியக் கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை நான் அளித்தேன்.
அப்போது, அவற்றில் முக்கியப் பிரச்சினையாக மேகதாது அணை குறித்து விளக்கி, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தைக் கைவிட அறிவுறுத்தும்படி, பிரதமரைக் கேட்டுக்கொண்டேன். இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் 3.7.2021 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது திட்டம், பெங்களூரு பெருநகரத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும்தான் எனவும், தமிழகத்தின் பவானி ஆற்றில் துணைப்படுகையில் உள்ள குந்தா மற்றும் சில்ஹல்லா நீர்மின் திட்டங்களை மேற்கோள் காட்டி, மேகதாது திட்டத்தைப் பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இதுகுறித்த ஐயங்களைப் போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலாக, 04.07.2021 அன்று, நான் அனுப்பிய கடிதத்தில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினியின்கீழ் உள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியில் வரும் தண்ணீருக்கு, மேகதாது திட்டம் தடையாக இருக்கும் என்றும், அது தமிழக விவசாயிகளின் நலன்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, இத்திட்டத்தைத் தமிழகம் எக்காலத்திலும் ஏற்க இயலாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்.
இதைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர், 06.07.2021 அன்று மத்திய ஜல் சக்தி அமைச்சரைச் சந்தித்து, மேகதாது திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு கோரினார். மத்திய ஜல் சக்தி அமைச்சர், தமிழகத்தைக் கலந்தாலோசிக்காமல், கர்நாடகாவின் மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று அப்பொழுது உறுதியளித்தார்.
இந்தச் சூழலில், இந்த அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானங்களை இக்கூட்டத்திலே ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களை அனைத்துக் கட்சிக் குழுவாகச் சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் அளித்திட வேண்டும் என்றும் கோருகிறேன்.
காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை. விவசாய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை. அதில் அரசியல் நோக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழகம் ஒரே சிந்தனையில் நின்றது என்பதை நாம் காட்டியாக வேண்டும்.
மேகதாது அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். அதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அந்த உறுதிக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago