கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு, சில ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும்போது, மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது.
மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகள், மாநிலத்தின் பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வணிக வளாகங்களை திறக்கவும், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை செயல்படவும், தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதே சமயத்தில், கடைகளின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டுமென்றும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென்றும், குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டுமென்றும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும், கடைகளின் நுழைவுவாயில்களில் இடைவெளியை பராமரிக்கும் வகையில், குறியீடு போடப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நேற்றைய தினம், சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகங்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வணிக வளாகங்கள் அமைந்துள்ள தெருக்கள் திருவிழா போல் காட்சி அளித்ததாகவும், நூறு பேர் இருக்கக்கூடிய இடத்தில் இருநூறு நபர்கள் இருந்ததாகவும், தனிமனித இடைவெளி என்பது அறவே கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், முகக்கவசமே அணியாமல் ஐம்பது விழுக்காடு பேர் இருந்ததாகவும், சிலர் மூக்குக்கு கீழ் முகக்கவசம் அணிந்து இருந்ததாகவும், கடற்கரையிலும் இதே நிலைமை காணப்பட்டதாகவும், சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திலும் இதே நிலைமைதான் என்றும், உணவகங்களில் இடமே இல்லை என்ற சூழ்நிலை நிலவியது என்றும், அனைத்துத் தங்குமிடங்களும் நிறைந்து இருந்ததாகவும், ஓர் ஆண்டுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் நேற்று வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இது குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. விதியை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாலும், இது கரோனா தொற்றினை கட்டுப்படுத்த எவ்விதத்திலும் பயன்படாது. மாறாக, நோய்த் தொற்றினை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதே அனைவரின் கருத்தாக அமைந்துள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினர் கண்காணிக்க உத்தரவிட வேண்டுமென்றும், எக்காரணத்தைக் கொண்டும் கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago