தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை: மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஜிகா வைரஸ் குறித்து தமிழகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் டெங்குவின் தொடர்ச்சி என்றும் கூறப்படுகிறது. ஜிகா வைரஸை ஏற்படுத்தும் கொசு கடித்தவுடன் ஒருவார காலத்துக்குள் அந்த நோய் பாதிப்பு இருக்கும்.

கேரளாவில் எந்த பகுதியில் ஜிகா பரவல் ஏற்பட்டிருக்கிறதோ, அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் குறிப்பாக, பழுகல், பத்துக்காணி, கொள்ளங்கோடு, ஆறுதேசம் போன்ற பகுதிகளில் உள்ள 2,660 வீடுகளில் வீடுகள்தோறும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கேரளாவும் தமிழகமும் சந்திக்கும் எல்லையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதித்ததில், யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது மன நிறைவை அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இதுபோன்ற ஆய்வுகளை, நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் மக்களையும், இது போன்ற பரிசோதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பேருந்து, லாரிகள், ரயில்கள் போன்றவற்றின் மூலம் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வருகின்றவர்களையும் இதேபோன்ற பரிசோதனைகளை செய்து தமிழகத்துக்கு அனுமதிக்கும் பணிகளும் 4-5 நாட்களாக நடைபெறுகின்றன".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE