யானைக்கல் தரைப்பாலத்தின் நடுவில் குப்பை குவியல்கள்: வைகை ஆற்றை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வைகை ஆற்றில் அப்புறப்படுத்திய குப்பைகள், யானைக்கல் தரைப்பாலத்தின் நடுவில் நாள் கணக்கில் மலைப்போல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், வாகனங்கள் யானைக்கல் தரைப்பாலத்தை கடப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் மதுரையின் வட மற்றும் தென் பகுதிகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலங்கள், தரைப்பாலங்கள் உள்ளன. இதில், சிம்மக்கல் பகுதியையும், கோரிப்பாளையத்தையும் இணைக்கும் யானைக்கல் தரைப்பாலம் முக்கியமானது.

மீனாட்சி கல்லூரி அருகே இருந்து சிம்மக்கல் வரை இந்த தரைபாலம் செல்கிறது. வைகை ஆற்றில் வெள்ளம் வரும்பாது இந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது. மற்ற நேரங்களில் வாகனங்கள், நடந்து செல்வோர் இந்த தரைப்பாலம் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தரைப்பாலத்தின் அடியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர், தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்து வைத்திருப்பார்கள். அதுபோல், வாடகை கார் ஓட்டுநர்கள், அடுத்த வாடகை ஆர்டர் வரும்வரை அதில் பார்க்கிங் செய்து ஒய்வெடுப்பார்கள்.

இந்த தரைப்பாலம் அமைந்துள்ள வைகை ஆற்றில் கடந்த பல மாதமாக ஆகாய தாமரைச்செடிகள் அதிகளவு இருந்தன. வாழைத்தார்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட பல்வகை குப்பைகளும் வைகை ஆறு கரையோரப்பகுதிகளில் குவிந்து அழுகி கிடந்தன.

அதனால், வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டாலும், இந்த பகுதியை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி ஊழியர்கள், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அகற்றிய ஆகாய தாமரை செடிகளை, உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்லாமல் யானைக்கல் தரைப்பாலத்தின் நடுவில் மலைபோல் குவித்து வைத்திருக்கின்றனர். ஏற்கெனவே தரைப்பாலத்தின் மேலே உயர்மட்ட மேம்பாலம் செல்கிறது. அதன் பிரம்மாண்ட தூண்கள் தரைப்பாலத்தின் நடுவில் உள்ளது.

அதில், வாகனங்கள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதால், இந்த தரைப்பாலத்தின் வழியாக வாகன ஒட்டிகள் பெரும் சிரமப்பட்டு சென்று வந்தனர். தற்போது குப்பைகளை தரைப்பாலத்தின் மையத்தில் குவித்து வைத்திருப்பதால், வாகனங்கள் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்த முடியவில்லை.

தரைப்பாலத்தின் ஓரத்தில் தடுப்பு சுவர் எதுவும் இல்லை. தற்போது வைகை ஆற்றில் ஒரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவில் வேகமாக இந்த தரைப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் தடுமாறினால் ஆற்றுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து இடையூறாக நாள் கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பை குவியல்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE