115 சாதிகளை ஓரணியில் திரட்டிய உள்ஒதுக்கீடு: முதல்வரைச் சந்திக்க முடிவு

By கே.கே.மகேஷ்

'115 எம்.பி.சி. மற்றும் டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு' சார்பில் மதுரையில் இன்று (ஜூலை 11) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள விடுதி ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில், ஆண்டிப்பண்டாரம், இசைவேளாளர், ஊராளிக்கவுண்டர், கந்தர்வக்கோட்டை கள்ளர், குரும்பக் கவுண்டர், குலாளர், குறவர், கூத்தப்பர் கள்ளர், மறவர், தெலுங்குபட்டி செட்டி, தொட்டிய நாயக்கர், நரிக்குறவர், பண்ணையார், பரவர், பிரமலைக்கள்ளர், பெரியசூரியூர் கள்ளர், போயர், ஒட்டர், மருத்துவர், மறவர், மீனவர், முத்தரையர், வண்ணார், வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர் உள்பட பல்வேறு சமூக பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

"இத்தனை சாதிகள் ஒரே அரங்கில் இருந்தால், என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ?" என்று ஒருவித அச்ச உணர்வுடன்தான் நான் கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், நேற்று வரையில் ஒவ்வொரு ஊரிலும் அடித்துக்கொண்ட சாதிகளின் நிர்வாகிகள் கூட, அங்கே அருகருகே அமர்ந்திருந்தார்கள். தங்களுக்குள் உயர்வு, தாழ்வு பேசாமல் மேடையை இயல்பாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

வண்ணார், ஒட்டர், நரிக்குறவர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சாதிகளின் நிர்வாகிகளுக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ராமகிருஷ்ணன், 'தொட்டிய நாயக்கர்' சமூக நிர்வாகி எம்.பழனிசாமியை பேச அழைக்கும்போது தவறுதலாக சாதிப் பெயரை 'வேட்டைய நாயக்கர்' என்று சொல்லிவிட்டார். அரங்கில் இருந்த சிலர் சத்தமாகச் சிரித்தும்விட்டார்கள்.

ஆனாலும் புன்னகையுடன் மைக் பிடித்த பழனிசாமி, "ஒண்ணும் தப்பில்ல. அவங்களும் நாங்களும் மாமன் மச்சான் போலத்தான். அதுமட்டுமில்ல, இங்க இருக்கிற 115 சாதிகளும் இனிமே நம்ம சாதிதான். நாமெல்லாம் ஒரே குடும்பம்" என்று சொல்லி கைத்தட்டல் வாங்கினார்.

துண்டு நோட்டீஸ் கொடுப்போம்

பண்ணையார் சமூக பிரதிநிதி மயிலேறும் பெருமாள் பேசுகையில், "சமூகநீதி குறித்த அடிப்படை அறிவே இந்தக் கால இளைஞர்களிடம் சுத்தமாக இல்லை. இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், எடப்பாடி பழனிசாமி கடைசி காலத்தில் செய்துவிட்டுப் போன குளறுபடியால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எப்படிப் புரிந்துகொள்வார்கள்?.

எனவே, இங்கு வந்துள்ள ஒவ்வொரு சமூக பிரதிநிதிகளும் இடஒதுக்கீடு என்றால் என்ன, வன்னியர் இடஒதுக்கீட்டால் நம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன என்று துண்டு பிரசுரங்கள் அடித்துக்கொடுத்து விளக்க வேண்டும்" என்றார்.

தெலுங்குபட்டி செட்டி சமூகம் சார்பில் பேசிய அரசு திருவளவன், "நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். தமிழகத்தில் சமூகநீதி என்ற பெயரில் சாதி அரசியல்தான் நடக்கிறது. ஏழெட்டு மாவட்டங்களில் மட்டுமே உள்ள ஒரு சமூகத்தினரைக் காட்டி ராமதாஸால் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற முடிகிறது என்றால், 35 மாவட்டங்களில் விரவிக்கிடக்கிற 115 சமூகங்களும் ஒன்றிணைந்தால் நாம் நமக்கான உரிமையைப் பெற முடியாதா?

அரசியலில் இருந்து விலகியிருந்து எதையும் சாதிக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சக்தியாகத் திரள வேண்டும்" என்றார்.

கல்லூரிகள் திறக்கும் முன்...

தொட்டிய நாயக்கர் சமூக நிர்வாகி எம்.பழனிசாமி பேசுகையில், "நாம் உடனே செய்ய வேண்டியது வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த அரசு அமல்படுத்திவிடாமல் தடுப்பதுதான். ஏனென்றால், அதனை நடைமுறைப்படுத்தச் சொல்லி முதல்வருக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கிறார் ராமதாஸ்.

ஆகஸ்ட்டில் கல்லூரிகள் திறக்கப் போகின்றன. அந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், நம்முடைய பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வன்னியர்களே கிடையாது.

ஆனால், அங்குள்ள சட்ட, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் 10.5 சதவீத இடத்தை வன்னியருக்கென நிரப்பாமல் வைத்திருப்பார்கள். ராமதாஸ் வடக்கிருந்து மாணவர்களை அனுப்பி வைப்பார். நம் பிள்ளைகள் சீட் கிடைக்காமல் பரிதவிப்பார்கள்.

எனவே, இந்த விஷயத்தில் சீரியஸாக முடிவெடுக்க வேண்டும். 1978-ல் நான் எம்எஸ்சி படிப்பில் சேர்ந்தபோது, அரசு கல்லூரிகளில் குறைந்தளவே இடம் இருந்தது. 69 சதவிகித மதிப்பெண் பெற்ற வன்னியரும், அதே மதிப்பெண் பெற்ற நானும் இடத்துக்குப் போட்டிப்போட்டபோது, எனக்குத்தான் சீட் கிடைத்தது. காரணம், அப்போது நாங்கள் டி.என்.டி. (குற்றப் பழங்குடியினர்) பட்டியலில் இருந்தோம்.

எனவே, எங்களை எஸ்டியாக கருதி சீட் தந்தார்கள். அதற்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டி.என்.டி.யை டி.என்.சி.யாக (குற்றப் பரம்பரை சாதிகள்) மாற்றிவிட்டார். அதனால் உரிமை பறிபோய்விட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள டி.என்.டி.யினருக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

வண்ணார் சமூக பிரதிநிதி கே.பி.மணிபாலா பேசும்போது, "இங்கிருக்கிற மிகவும் பிற்பட்டோர் சமூகங்களிலேயே கல்வியிலும் சரி, பொருளாதாரத்திலும் சரி மிகமிக பிற்பட்ட நிலையில் இருப்பது வண்ணார், மருத்துவர் (நாவிதர்), ஒட்டர், போயர், குலாளர், ஆண்டிப்பண்டாரம், பூசாரி போன்ற சமூகங்கள்தான்.

எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எங்களைப் பிரித்து மிகமிக பிற்படுத்தப்பட்டோர் (எம்எம்பிசி) என்ற பட்டியலின் கீழ் தனி ஒதுக்கீடும், சலுகையும் வழங்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டங்களை நடத்திவந்தோம். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை வஞ்சித்துவிட்டார். ஒடுக்கப்பட்ட எங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிற வேலையைச் செய்துவிட்டுப் போய்விட்டார்" என்றார்.

நிராகரிக்கப்பட்ட அறிக்கை சட்டமானது

மறவர் சமூகம் சார்பில் பங்கேற்ற விஜயகுமார், "தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இதுவரையில் நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள். உயர் அதிகாரிகளும் வன்னியர்களே. இதனால், அந்தத் துறையே ஒரு சாதிக்கான துறை போல ஆகிவிட்டது.

சட்டநாதன் கமிஷன் 1970-ல் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலையும், அம்பாசங்கர் ஆணையம் 1985-ல் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதைப் பார்க்கலாம். 1970-ல் 8.26 லட்சமாக இருந்த மறவர் மக்கள்தொகை 15 ஆண்டுகள் கழித்து 1985-ல் 4.97 லட்சமாக குறைந்துவிட்டது.

அதேபோல, கள்ளர் ஜனத்தொகை 5 லட்சத்தில் இருந்து 3.37 லட்சமாகவும், ஒட்டர், போயர் மக்கள்தொகை 3 லட்சத்தில் இருந்து வெறும் 76 ஆயிரமாகவும், முத்தரையர் மக்கள்தொகை 9 லட்சத்தில் இருந்து 4.57 லட்சமாகவும் குறைந்துவிட்டது.

இப்படி தவறான அறிக்கை தந்த அம்பாசங்கர் ஆணையத் தலைவர் அம்பாசங்கரும் வன்னியர்தான். அவர் பரிந்துரைத்த விஷயங்களை அடிப்படையாக வைத்துத்தான் இன்றைய இடஒதுக்கீட்டையே கொண்டுவந்திருக்கிறார்கள்.

அந்த ஆணையத்தின் 21 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் தலைவரின் அறிக்கையை நிராகரித்ததுடன், தனியாக சில பரிந்துரைகளையம் அரசுக்குக் கொடுத்தார்கள். அந்த 14 பேரில் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் தர்மலிங்கம், குமரி அனந்தன், சுவாமிநாதன், ஜான் வின்சென்ட் ஆகியோரும் அடக்கம்.

இப்படி பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை, தேர்தலுக்காக இரவோடு இரவாக மசோதாவாக தயார் செய்து துணை முதல்வருக்கே தெரியாமல் முதல்வர் திடீரென சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். தொடர்ந்து அறவழியில் போராடுவோம். அரசு செவிசாய்க்காவிட்டால், ராமதாஸ் மரம் வெட்டியதுபோல நாங்களும் மறவழியில் போராட வேண்டியது வரும்" என்றார்.

இறுதியாகப் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகியும், முத்தரையர் பிரமுகருமான எஸ்.பன்னீர்செல்வம், "தமிழகத்தில் உள்ள 68 டி.என்.டி. மற்றும் 47 எம்.பி.சி. சமூகங்களை தூசி துரும்பாக மதித்து அவர்களின் 20 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து, ஒரு சாதிக்கு மட்டும் எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கிவிட்டது.

குறுகிய அரசியல் லாபத்துக்காக சொந்தக் கட்சியினரின் கருத்தைக்கூட கேட்காமல், எடப்பாடி பழனிசாமி செய்த இந்த அநீதிக்குப் பரிசாக, 115 சமூகத்தினரும் அவருக்குத் தேர்தலில் தோல்வியைப் பரிசளித்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு எங்களை ஓரணியில் திரட்டியிருக்கிறது.

இன்றைய கூட்டத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களின் உரிமையை உறுதி செய்யும் வரையில் வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானித்திருக்கிறோம். அதேநேரத்தில், அந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாங்கள் ஏற்கெனவே தொடர்ந்த வழக்குகளின் மூலம் சட்டநடவடிக்கையையும் தொடர்வோம் என்றும் முடிவெடுத்துள்ளோம்.

அடுத்தக்கட்டமாக 115 சமூகங்களும் குறைந்தது தலா 100 பேரையாவது அழைத்துக்கொண்டு போய் சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்