பொதுச் செயலாளர் பதவி ரத்து விவகாரம்: வழக்கைத் தொடர்ந்து நடத்த சசிகலா முடிவு?

By செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து, சசிகலா, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மாற்றப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து வழக்கை நடத்தப்போவதாக சசிகலா தரப்பில் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். 2017 செப்டம்பர் 12-ல் நடந்த அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களை எதிர்த்து வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதமானது. அந்தத் தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், உரிமையியல் நீதிமன்றப் பதிவாளருக்கு சசிகலா சார்பில் விசாரணையை விரைவாக நடத்தக் கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 4-வது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், வழக்கு மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2021 மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனார். அப்போது அவர் அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா திடீரென அறிவித்தார். இதனால் அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கின் நிலை என்ன என்பது கேள்விக்குறியானது.

சசிகலா, தினகரன் வழக்குகளை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. டிடிவி தினரகன் தரப்பில், அமமுக என்ற கட்சி தொடங்கிவிட்டதால் வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை வாபஸ் பெறுவதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவு என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான இருவரின் கோரிக்கைகளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்ததாலும், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாலும் இந்த உரிமையியல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணை தேர்தலுக்குப் பின் ஏப்.9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. அதிமுக ஆட்சியை இழந்து 65 எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் போட்டி உண்டானது.

பின்னர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக்க ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார். அதன் பின்னரும் அதிமுகவுக்குள் பிரச்சினைகள் தீரவில்லை. ஓபிஎஸ் தனியாக அறிக்கை விடுவது, சசிகலா அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்தது. ஆனாலும், சசிகலா அதிமுக நிர்வாகிகளிடம் பேசுவதும், மீண்டும் வருவேன், கட்சியை மீண்டும் ஜெயலலிதா காலம் போல் மதிப்பு மிக்கதாக மாற்றுவேன் எனப் பேசி வருவதும், அதிமுக தலைமைக்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கில் சசிகலா விலகாமல் தன் நிலை பற்றித் தெரிவிக்க அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்றும் தொண்டரிடம் உரையாடிய சசிகலா, அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா வழக்கைக் கையிலெடுப்பதும், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் என அறிவிப்பதும், கட்சிக்குள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே உள்ள போட்டியும் வரும் காலங்களில் அதிமுகவுக்கு நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்