மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிக்கின்றன.
போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துளைக் கட்டுப்படுத்த பாலக்காடு சாலை மதுக்கரையில் தொடங்கி, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில், மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசால் கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டப்பணிக்காக 16 கிராமங்களில் இருந்து 355 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டன.
நில உரிமையாளர்களுக்கு, அரசு வழிகாட்டி மதிப்பில் இருந்து, கட்டிடங்களுக்கு மூன்றரை மடங்கும், மரம் உள்ளிட்டவற்றுக்கு இரண்டறை மடங்கும் தொகை வழங்கப்பட உள்ளது. மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரம் என்பதால், ஒரேடியாக இத்திட்டத்தை தொடங்காமல், மூன்று கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. முதல்கட்ட திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ள 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 210 நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டது. மேற்கண்ட திட்டத்துக்காக, நிலத்தை கையகப்படுத்த முதல்கட்ட நிதி ரூ.158 கோடி கடந்த ஜனவரி மாதம் மாவட்ட வருவாய்த்துறைக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியில் இருந்த இத்திட்டம், நீண்ட தாமதத்துக்கு பிறகு தற்போது தீவிரமடைந்துள்ளது.
» இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரிய மனு தள்ளுபடி
» பிரான்ஸில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: புதுச்சேரியில் நைஜீரியா இளைஞர் கைது
மூன்று கட்டங்களாக திட்டப்பணி
மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி, முதல் கட்டமாக மதுக்கரையில் தொடங்கி சுண்டக்காமுத்தூர், தீத்திப்பாளையம், பேரூர், பேரூர்செட்டிபாளையம், மாதம்பட்டி வரையிலும், இரண்டாம் கட்டமாக சித்திரைச்சாவடியில் தொடங்கி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் வழியாக பன்னிமடை வரையிலும், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட திட்டப்பணி நஞ்சுண்டாபுரத்தில் தொடங்கி, கூடலூர், கூ.கவுண்டம்பாளையம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ தற்போதைய சூழலில், கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மேற்குபுறவழிச்சாலை திட்டம் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், நீலகிரியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கோவை - பாலக்காடு சாலையில் இருந்து நீலகிரி செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை தற்போதுள்ளது. மேற்குபுறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். விபத்துகள், போக்குவரத்து நெரிசல்கள் குறையும். நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து, இத்திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். அதேசமயம், மேற்கண்ட பகுதிகளின் பசுமைச்சூழல் மாறாத வகையில் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.
நிலம் கையகப்படுத்தும் பணி
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் கூறும்போது,‘‘ மேற்கு புறவழிச்சாலை திட்டம் முதல்கட்டமாக 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி, வருவாய்த்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, தற்போது வரை 120 நில உரிமையாளர்களுக்கு ரூ.35 கோடி அளிக்கப்பட்டு 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் பகுதிகளில் உள்ள 40 நில உரிமையாளர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் கிராமங்களில், இதுவரை 50 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், புறவழிச்சாலை திட்டப்பணி தகுந்த நிறுவனம் மூலம் அடுத்த சில மாதங்களில் தொடங்கப்படும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago