வாணியம்பாடியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விடிய, விடியப் பெய்த கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாற்றுக் கரையோரம் வசிக்கும் மக்களுக்குத் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வேலூர், திருப்பத்தூர், தி.மலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் ஆந்திர மாநிலத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
அந்த வகையில், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயிலையொட்டி ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி, தண்ணீர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெறியேறியது. இதனால், வாணியம்பாடி, அம்பலூர், திம்மாம்பேட்டை, நாராணபுரம், பெரும்பள்ளம், கொடையாஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள மண்ணாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வாணியம்பாடியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய கனமழை பெய்ததால் புல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி அதிலிருந்து வெளியேறி தண்ணீர் பாலாற்றில் பெருவெள்ளமாக மாறி ஓடியது.
» 3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» முதல்வர் ஸ்டாலின் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
திம்மாம்பேட்டை, அலசந்தராபுரம், நாராணபுரம், ராமநாயக்கன்பேட்டை, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள மண்ணாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அம்பலூர் தரைப்பாலத்தில் இருபுறமும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் பாலம் முழுமையாக மூடப்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாகச் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 5 கி.மீ. தொலைவுள்ள கிராமம் வழியாகச் சுற்றிச்செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
புல்லூர் பாலாறு நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதைக் காண வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி பகுதிகளைச் சேர்ந்த 100-க்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். பாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைப் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றியும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.
புல்லூர் தடுப்பணையில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம், திம்மாம்பேட்டை மண்ணாற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் சூழ்ந்தது. இதனால், அங்கு பயிரிடப்பட்ட வாழை, தென்னை, நிலக்கடலை, பப்பாளி, மா, கொய்யா உள்ளிட்ட பயிர் வகைகள் மழைநீரில் மூழ்கி சேதமானதாக விவசாயிகள் வேதனையடைந்தனர்.
வாணியம்பாடியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் உதயேந்திரம், அம்பலூர், திம்மாம்பேட்டை, நாராணபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.அதேபோல, பாலாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அம்பலூர் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, பாலாற்றையொட்டி வசிக்கும் பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். அதன்படி, அலசந்தாபுரம், கொடையாஞ்சி, நாராயணபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றையொட்டி வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.
கனமழை காரணமாகத் திம்மாம்பேட்டை - நாராயணபுரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்ததால் ஜலம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இன்று காலை முதல் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை விவசாய நிலங்களுக்குத் திருப்பி விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:
ஆலங்காயம் 72 மி.மீ., ஆம்பூர் 45 மி.மீ., வடபுதுப்பட்டு 44.2 மி.மீ., நாட்றாம்பள்ளி 70.6 மி.மீ., கேதாண்டப்பட்டி 73 மி.மீ., வாணியம்பாடி 64 மி.மீ., திருப்பத்தூர் 55.50 மி.மீ. என மொத்தமாக 424.30 மி.மீ. அளவு மழையளவு பதிவாகியிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago