அமமுக வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அக்கட்சித் தொண்டர்களுக்கு தினகரன் இன்று (ஜூலை 09) எழுதிய கடிதம்:
"கரோனா 2-வது அலையின் தாக்குதல் ஓரளவுக்கு ஓய்ந்து இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புவது நிம்மதி அளிக்கிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். தவறவிட்டிருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பொறுப்புள்ள அரசியல் இயக்கமாக பேரிடர் கால அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியதால் நாம் அமைதி காத்த சூழல் இப்போது மாறியிருக்கிறது. இதையடுத்து, மாவட்டங்கள் தோறும் அமமுகவின் ஆய்வுக் கூட்டங்களை நீங்கள் நடத்திவருவது மகிழ்ச்சி தருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திடவில்லையே என்ற வருத்தம் தங்களுக்கு இருந்தாலும், ஜெயலலிதா வழிவந்த உண்மைத் தொண்டர்களின் தனித்த குணத்தோடு, லட்சியப் படையின் வீரர்களாக நெஞ்சுரத்தோடு தொடர்ந்து இயங்குவது நம்முடைய இயல்பு அல்லவா?!
» தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச் செய்கிறது: அண்ணாமலை
» லியோனி நியமனம்; தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக உள்ளது: ஓபிஎஸ்
தேர்தல் அரசியலைப் பொறுத்தமட்டில் வெற்றி, தோல்வி என்பது உலகின் எல்லா இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் பொதுவானதுதான். நம்முடைய கொள்கைத் தலைவர்களான அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்து அவற்றில் இருந்து மீண்டெழுந்து, மக்கள் மனங்களை வென்று சரித்திர சாதனைகளைப் புரிந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான்; நிச்சயம் காலத்தை மட்டுமல்ல; காட்சிகளையும் கூட மாற்றுகிற சக்தி நமக்கு உண்டு.
ஏனெனில், நீங்கள் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்த்து நம்முடைய இயக்கத்தை ஊருக்கு ஊர் உருவாக்கி, கட்டி எழுப்பவில்லை. 'உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்' என்ற உடையாத உறுதியோடும், 'ஜெயலலிதா காலத்துப் பெருமைகளோடு அமமுகவும், தமிழகமும் மீண்டெழ வேண்டும்' என்ற வைராக்கியத்தோடுமே நாம் தொடர்ந்து இயங்குகிறோம்.
சுயலாபத்துக்காக இடையில் போகிற சிலரைப் பற்றிக் கவலைப்படாமல், எதையும் எதிர்கொண்டு சிங்கத்தைப் போல சிலிர்த்தெழுந்திடும் உத்தியும், சக்தியும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் இன்றைக்கும் கூட யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் கண்களுக்கு நாம் சிம்ம சொப்பனமாகத் தெரிகிறோம்.
'திராவிடப் பெருங்குடி மக்களே! உங்களுக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். நாம் போட்டிருக்கிற இந்த அடித்தளம் சாமானியமானதல்ல; காலத்தாலே கிள்ளி எறியப்படக் கூடியதுமல்ல. எவ்வளவு பெரிய கல் நெஞ்சத்தைக் கடப்பாறையாக்கி முயன்றாலும் இந்த அடித்தளத்தை யாராலும் கிள்ளி எறிய முடியாது. அந்த அளவுக்குப் பலமான அடித்தளம் போட்டாகிவிட்டது' என்ற அண்ணாவின் வார்த்தைகள் அப்படியே நம் இயக்கத்தைப் பற்றி சொன்னதைப் போன்றே இருக்கிறதல்லவா!
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகமெங்கும் நாம் கணிசமான வெற்றியை ஈட்டினோம். இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தாலும் 'நம்முடைய வெற்றி சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது' அவ்வளவுதான். யாராலும் அதனை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது.
இதையெல்லாம் தாண்டி உங்களின் உள்ளத்தில் இருக்கும் சில தேர்தல் நேரத்து வருத்தங்களை நன்கு அறிவேன். உங்களைப் போன்ற உண்மைத் தொண்டர்களின் உணர்வுகள்தான் இந்த இயக்கத்தை வழிநடத்துகிற சக்தி என்பதைப் பலமுறை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். தங்களுடைய எண்ணங்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு, அத்தனை கருத்துகளையும் பரிசீலித்துப் புத்தம் புதுப் பொலிவோடும், வலிவோடும், முன்பைவிட வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படப்போகிறோம். மிகச் சிறப்பான எதிர்காலம் நமக்காகக் காத்திருக்கிறது.
அந்த உத்வேகத்தோடு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முழுவீச்சில் தேர்தலுக்குத் தயாராவோம்.
மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட அமமுக மாவட்டங்கள் வாரியாக ஏற்கெனவே நடைபெற்றும் வரும் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கான வார்டுகள் வாரியாக தேர்தல் பணிகளைத் தொடங்கிட வேண்டுகிறேன்.
இதுதவிர, அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கும் நாம் தயாராக வேண்டியிருக்கிறது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டே மாதங்களில் பல விஷயங்களில் தடுமாறி வருவதைத் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெட்ரோல் - டீசலுக்கான வரி, நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, மின்வெட்டு எனப் பலவற்றில் விடியல் தரப்போவதாகச் சொன்னவர்கள், தமிழகத்தை ஒட்டுமொத்தமாக இருளில் தள்ளிவிடுவதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டம் போட்டவர்கள் அடுத்து என்னாகுமோ, எங்கே போகப் போகிறோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது.
இவர்களிடமிருந்து அன்னை தமிழ்நாட்டைக் காப்பாற்றிட வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, 'ஊக்கத்தைக் கைவிடாதே; அதுவே வெற்றியின் முதல் படிக்கட்டு' என்ற அண்ணாவின் மொழியை நினைவில் வைத்து, ஒரு துளியும் தளர்வின்றி உற்சாகமாக இயங்குவோம்! நம் லட்சியப்பயணத்தில் வென்றே தீருவோம்!".
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago