கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி நீக்கம்: நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது குறித்து தீர்வு காண, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் கல்வித்துறை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, இந்தியா முழுமையும் நடத்தி வருகின்றது. அங்கு, 1 முதல் 6 வரையில், மாநில மொழிகளைப் படிக்கலாம். ஆனால், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில், விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. தமிழகத்தில் பயின்ற மாணவர்கள், தமிழைத்தான் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து படித்து வந்தனர்.

ஆனால், தமிழ் மொழியைத் தற்போது நீக்கி விட்டதாகவும், இந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என மாற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து, தீர்வு காண, டெல்லியில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று (ஜூலை 09) சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்: கோப்புப்படம்

இதன்பின், திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழகத்தில் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு வகுப்புகள், பாடப் பிரிவுகள் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்தியிருக்கிறேன். அப்போது, கல்வித்துறை இதுகுறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று சபாநாயகர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பின்னர், கடந்த மார்ச் மாதம் அப்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த பொக்ரியால் நிஷாங்க், இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பதாக எனக்குக் கடிதம் எழுதினார்.

ஆனால், இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக ஆன்லைனில் எல்லாப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடம்தான் இருக்கின்றது. தமிழ் மொழி இல்லை.

6-ம் வகுப்பு படிக்கும் மாணவர், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால்தான் 7-ம் வகுப்புக்குச் செல்ல முடியும் என்று சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால், தாய்நாட்டில் தாய்மொழியைப் படிக்க வாய்ப்பில்லை.

இந்த விவகாரம், உறுதி அளித்ததை மீறி நடந்திருப்பதால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தேன். அவர் உடனே கல்வித்துறைச் செயலாளரை வரவழைத்து அதுகுறித்துப் பேசினார்.

அதன்பின், என்னிடம், 'நீங்கள் தமிழகத்தை ஒரு உதாரணமாகக் காட்டுகிறீர்கள், உங்களுடைய கோரிக்கை எல்லா மாநிலங்களிலும் வரவேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. இது கொள்கை அளவிலான முடிவு. நிச்சயமாக நான் இதுகுறித்துப் பேசி, நல்ல முறையில் முடிவெடுக்கிறேன்.

பிரதமர் உட்பட என்னைப் போன்ற அமைச்சர்கள் யாரும் மாநில மொழிகளுக்கு எதிரிகளில்லை. அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்' எனக் கூறினார். அதை நடைமுறையில் காட்டுமாறு நான் வலியுறுத்தினேன்".

இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்