கோலாகலமாக நடந்து முடிந்தது கும்பகோணம் மகாமகம்: 46 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

By கல்யாணசுந்தரம், சி.கதிரவன், வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் இதுவரை கும்பகோணம் கண்டிராத அளவுக்கு 22-ம் தேதி வரை 46 லட்சம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று பல்லாயிரக்கணக்கானோர் நீராடியதாக தெரிவிக்கப்பட்டது.

மகாமகத்தையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்களில் பிப்ரவரி 13-ல் ஏற்றப்பட்ட கொடிகள் நேற்று இறக்கப்பட்டன. பிப்ரவரி 14-ம் தேதி 5 வைணவக் கோயில்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இன்று (பிப்ரவரி 24) இறக்கப்படுகின்றன.

சிறிய தெருக்களையும், குறுகிய சந்துகளையும் கொண்ட சிறிய நகரமான கும்பகோணம் இத்தனை லட்சம் பக்தர்களை எப்படி எதிர்கொண்டது. பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இத்தனை லட்சம் பக்தர்கள் எப்படி சிக்கல் இல்லாமல் புனித நீராடினர் என்ற கேள்விக்கு, அனைத்துத் துறையினரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதே காரணம் என்றால் அதுமிகையல்ல. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இந்த மாபெரும் பணியில் பக்தர்களை வழிநடத்தி, மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறை ஆகிய இடங்களில் சிக்கலின்றி புனித நீராட வைத்த பெருமை காவல் துறையை சாரும்.

தமிழகம் முழுவதிலுமிருந்து காவல் துறை அதிகாரிகள், சிறப்புக் காவல் படையினர், கமாண்டோ படையினர், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என காவல் துறையைச் சேர்ந்த 20,000 பேர் கடைசி 3 நாட்களில் முழுவதுமாக களமிறக்கப்பட்டு பணியாற்றினர்.

மகாமகக் குளத்தில் தெற்கு கரையிலேயே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து நகரம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த 400 கேமராக்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணித்து உரிய உத்தரவுகளை காவல் துறை அதிகாரிகள் பிறப்பித்தவண்ணம் இருந்தனர்.

இதேபோன்று மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், சக்கரப் படித்துறை ஆகிய இடங்களில் 1,200 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றினர்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் சுகாதாரம் தொடர்பான எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காக கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 134 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதேபோன்று மகாமகக் குளத்தில் லட்சக்கணக்கான மக்கள் நீராடினர். இந்த தண்ணீர் 15 நிமிடத்துக்கு ஒருமுறை சோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் அளவுக்கு குளோரி னேஷன் செய்யப்பட்டது.

ஒருபக்கம் குளத்தில் விநாடிக்கு 75 லிட்டர் தண்ணீர் விடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே எதிர்முனையில் விநாடிக்கு 65 லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதை பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் குளக்கரையில் முகாமிட்டு மேற்பார்வையிட்டவண்ணம் இருந்தனர்.

தெற்கு ரயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் என போக்குவரத்துக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இனியாவது கவனம் பெறுமா கும்பகோணம்?

தென்னக கும்பமேளா என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டு மகாமகப் பெருவிழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றுள்ளனர். கோயில்கள் நிறைந்த கும்பகோணம் நகரை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொண்டு பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்ற நிலுவையில் உள்ள கோரிக்கை மீது இனியாவது கவனம் செலுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கும்பகோணம் நகர மக்கள்.

மெச்சத்தக்க பணி...

தீர்த்தவாரி நாளன்றும், அதற்கு முதல்நாளும் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் குளத்தில் தண்ணீரில் பல மணி நேரம் வரிசையாக நின்று பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். பணி நேரமான 8 மணி நேரத்தை அவர்களுக்குள்ளாகவே குழுக்களாக பிரிந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி தண்ணீரில் நின்று பணியாற்றினர். தொடர்ந்து நிற்கவில்லை என்றாலும், பல மணி நேரம் தண்ணீரிலேயே நிற்பதால் சேற்றுப்புண், ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படக்கூடாது என்பதற்காக காலில் தடவிக் கொள்வதற்காக 50 லிட்டர் தேங்காய் எண்ணெய் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. இதேபோன்று பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் படிக்கட்டுகளில் இறங்கவும், ஏறவும் போலீஸார் உதவியது அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது.

பயன்படுத்தப்படாத தன்னார்வலர்கள்...

மகாமகப் பெருவிழாவில் காவல் துறைக்கு உதவியாக செயல்பட விருப்பம் தெரிவித்து தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் பெயர்களை பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தப்படவில்லை. பல்வேறு இடங்களில் மக்களுக்கு வழிகாட்டுதல், இயலாதவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதற்கு இதுவும் காரணமாக அமைந்திருந்தது. வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வழிகாட்டுவதற்காக சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தியிருக்கலாம் என்பது பொதுமக்களின் கருத்து.

புறநகர் பகுதிகளிலேயே பேருந்துகள், கார்கள் நிறுத்தப் பட்டதால், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் நகருக்குள் வந்து செல்ல சிரமப்பட்டனர். இதற்காக கல்லூரி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் அது போதிய பலனை தரவில்லை.

நடடா ராஜா, நடடா...

நகருக்குள் பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் நடமாட்டம் கடந்த 19-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்களுக்கு சற்று அவதிதான் என்றாலும், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் விபத்துகளையும், நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்க இந்த நடவடிக்கைகள் தேவைதான். ஒரு நாள்தானே நடக்கிறோம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

2 ஆண்டுகளாக திட்டமிடல்

மகாமகப் பெருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் தலைமையில் கடந்த 2 ஆண்டுகளாக இதற்கான திட்டமிடல்கள் நடைபெற்று வந்தன.

இதற்கென அமைக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் பல்வேறு கட்டங்களில் நடத்திய கூட்டங்கள், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், களப் பணிகளே இந்த மாபெரும் விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான காரணங்களாக அமைந்திருந்தன.

அறநிலையத் துறை...

அனைத்து கோயில்களிலும் 10 நாள் உற்சவங்கள் ஒருங்கிணைப்பு, தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் உள்ளிட் டவைகளை அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ஆணையர் வீரசண்முகமணி ஆகியோர் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

மகாமகம் முடிந்தும் போக்குவரத்து நெரிசல்

பாதுகாப்புப் பணிக்காக வந்த போலீஸார் நேற்று அதிகாலை முதல் சொந்த ஊருக்கு புறப்பட்டதால், முக்கிய சந்திப்புகளில் போலீஸார் பணியில் இல்லை. அதேபோல கும்பகோணத்துக்கு வந்திருந்த வாகனங்கள் நேற்று நகரை விட்டு வெளியே சென்றதால் தஞ்சை மெயின் ரோடு, மயிலாடுதுறை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மனதுக்கு நிறைவான பணி...

மகாமகத்தை யொட்டி பாதுகாப் புப் பணிக்காக வந்த திருச்சி பட்டா லியன் காவலர் கவியரசன் கூறிய போது, “மகாமகக் குளத்திலிருந்து படியேற முடியாத முதியோர்களை கையைப் பிடித்து கரையேற்றிவிடும் போது, அவர்கள் பாராட்டியதும், பாராட்டும் விதமான பணியைச் செய்துள்ளோம் என்று நினைக்கும் போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாமகத்தில் இவ்வளவு மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், பணியாற்றியதும் மறக்கமுடியாதது” என்றார்.

விருதுநகர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் எல்.சுப்பிரமணி கூறியபோது, “நான் ஏற்கெனவே 1992, 2004 ஆகிய வருடங்களில் மகாமகப் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், இந்தாண்டு கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சிறப்பாகப் பணியாற்றியதுடன், தீர்த்தக் கிணறு களில் இருந்து தண்ணீரை இறைத்து பக்தர்கள் மீது தெளித்தனர். இதை எல்லோரும் வெகுவாக பாராட்டினர்” என்றார்.

மகாமகக் கோயில்களில் இன்று…

மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: விடையாற்றி - சுவாமி, அம்பாள் ஏகாசனம், புஷ்ப பல்லக்கில் புறப்பாடு, இரவு 8.

சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: மாசிமக பிரம்மோற்சவம்- விடையாற்றி, இரவு 7.

பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: விடையாற்றி திருவீதியுலா, இரவு 7.

ராஜகோபால சுவாமி கோயில்: விடையாற்றி- சுவாமி புறப்பாடு, இரவு 7.

சக்கரபாணி சுவாமி கோயில்: விடையாற்றி, இரவு 7.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்